பல நூறு பேரை ஆட்குறைப்பு செய்த ‘ஆப்பிள்’

1 mins read
3d6e634d-39d4-4572-ab3f-621bd48dcadf
மொத்தம் எத்தனை பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர் என்பதனைத் தெரிவிக்க ஆப்பிள் நிறுவனம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

கலிஃபோர்னியா: முன்னணி மின்னணுத் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் 600க்கும் மேற்பட்டோரை ஆட்குறைப்பு செய்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கார், திறன்கடிகை (Smart watch) காட்சித்திரை தொடர்பான திட்டப்பணிகளை நிறுத்த அந்நிறுவனம் முடிவெடுத்ததை அடுத்து, இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

ஆட்குறைப்பால் கலிஃபோர்னியாவின் சேன்ட கிளாராவிலுள்ள, ஆப்பிள் நிறுவனத்தின் கார் தொடர்பான முதன்மை அலுவலகத்தில் மட்டும் குறைந்தது 371 பேர் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அத்துடன், கார் தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருந்த வேறு சிலர், செயற்கை நுண்ணறிவு அல்லது எந்திரனியல் போன்ற பிரிவுகளுக்கு மாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஆட்குறைப்பு நடவடிக்கையால் மொத்தம் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பதைத் தெரிவிக்க ஆப்பிள் நிறுவனப் பேச்சாளர் மறுத்துவிட்டார்.

குறிப்புச் சொற்கள்