ஆறு மில்லியன் ‘ஐபோன் டுவோ’ கைப்பேசிகள் விற்கப்படலாம் எனக் கணிப்பு

ஆறு மில்லியன் ‘ஐபோன் டுவோ’ கைப்பேசிகள் விற்கப்படலாம் எனக் கணிப்பு

படம்: ராய்ட்டர்ஸ்

30 Sep 2026 - 7:21 pm

1 mins read

சான் ஃபிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனம் 2026ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 6 மில்லியன் ‘ஐபோன் டுவோ’ மடக்கு கைப்பேசிகளை விற்பனை செய்யும் என கவுன்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.

ஆப்பிளின் முதலாவது மடக்கு கைப்பேசியான ‘ஐபோன் டுவோ’, அக்டோபர் 23 ஆம் தேதி 1,999 அமெரிக்க டாலர் (S$2,554) விலையில் விற்பனைக்கு வரவுள்ளது. இதன்மூலம் மடக்கு கைப்பேசிகளுக்கான தேவை அதிகரிக்கும் என ஆப்பிள் நம்புகிறது.

மடக்கு கருவிகளின் விற்பனையில் ஆப்பிளும் அடியெடுத்து வைத்துள்ளதால் 2026ஆம் ஆண்டில் அவ்வகைச் சாதனங்களில் விற்பனை 13 விழுக்காடு அதிகரிக்கும் என்று ‘ஐடிசி’ சந்தை ஆய்வு கூறுகிறது.

மடக்கு கருவிகளின் விற்பனை 22.9 மில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஐபோன் டுவோ’ இல்லாவிடில் அந்தத் துறை வீழ்ச்சியைக் கண்டிருக்கும்.

‘ஐபோன் டுவோ’வுடன் செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிளின் ஐபோன் 18 புரோ கைப்பேசிகளும் சீனாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அதன் விற்பனை முந்தைய ‘ஐபோன் 17 புரோ’வைவிட 12 விழுக்காடு அதிகரித்துள்ளது.

சீனாவின் போட்டிமிக்க கைப்பேசி சந்தையில் ஆப்பிள் 33 விழுக்காட்டைத் தன்வசப்படுத்தியுள்ளது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

உதிரிப்பாகங்களின் விலை உயர்வால் மற்ற நிறுவனங்கள் தங்கள் கைப்பேசிகளின் விலையை அதிகரிப்பது ஆப்பிளுக்குச் சாதகமாக அமைந்துள்ளது என கவுன்டர்பாயின்ட் மூத்த ஆய்வாளர் இவான் லாம் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
ஐபோன்ஆப்பிள்விற்பனை