சான் ஃபிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனம், அதன் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியை அறிவித்துள்ளது.
நீண்டகாலமாக வன்பொருள் பிரிவுத் தலைவராக இருக்கும் திரு ஜான் டெர்னஸ் இவ்வாண்டு (2026) செப்டம்பர் மாதம் அந்தப் பொறுப்பை ஏற்பார். அவர் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிற்குப் பதிலாகப் பதவியேற்பார்.
ஆப்பிள் நிறுவனம் திங்கட்கிழமை (ஏப்ரல் 20) அந்தத் தகவலை வெளியிட்டது. செயற்கை நுண்ணறிவால் தொழில்நுட்பத் துறை பெரும் மாற்றங்களைச் சந்தித்துவரும் நிலையில் ஆப்பிளின் அறிவிப்பு வந்துள்ளது.
திரு டெர்னஸ், அந்நிறுவனத்தில் 2001ஆம் ஆண்டு சேர்ந்தார். அதன் பிறகு, ஆப்பிள் நிறுவனத்தின் பல்வேறு பொருள்களை உருவாக்குவதில் அவர் முனைப்புடன் செயல்பட்டார். ‘மேக்’ கணினிகளின் விற்பனை பெருகியதில் திரு டெர்னசுக்கு முக்கியப் பங்குண்டு.
சவால்கள் அதிகமுள்ள காலத்தில் திரு டெர்னஸ் புதிய பாதையை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். நிறுவனத்தின் வளர்ச்சி வலுவாக இருந்தாலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வேகத்திற்கு ஈடுகொடுப்பதில் அது சற்றுச் சிரமத்தை எதிர்கொள்கிறது.
“ஜான் டெர்னஸ், பொறியியல் வல்லுநரின் சிந்தனையையும் புத்தாக்க நிபுணரின் ஆன்மாவையும் நேர்மையுடனும் கண்ணியத்துடனும் வழிநடத்துகின்ற இதயத்தையும் பெற்றவர்,” என்று திரு குக் பாராட்டினார்.
திரு குக், நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராகப் பொறுப்பேற்பார் என்று அறிக்கையொன்றில் ஆப்பிள் தெரிவித்தது. அவர் 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்ற பிறகு, ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகளின் விலை கிட்டத்தட்ட 20 மடங்கு கூடியது.

