சோல்: அரசியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள தென்கொரிய அதிபர் யூன் சுக் யோலுக்கு நீதிமன்ற உத்தரவிலான புதிய கைதாணைக்கு தென்கொரிய ஊழல் தடுப்புப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) காத்திருந்தனர்.
திரு யூன் ராணுவச் சட்டத்தை அமல்படுத்தியதை அடுத்து, நாட்டில் பெரும் குழப்பநிலை ஏற்பட்டது.
ராணுவச் சட்ட உத்தரவின் தொடர்பில் கடந்த டிசம்பரில் மூன்று முறை விசாரணைக்குச் செல்ல மறுத்த திரு யூன், தமது இல்லத்தில் ஒளிந்துகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர் கைதுசெய்யப்படுவதைத் தடுக்க, அவரது இல்லத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
முதல் கைதாணையைப் பிறப்பித்த அதே நீதிமன்றம் புதிய கைதாணையைப் பிறப்பிக்கும் சாத்தியம் அதிகம் உள்ளது என்று கூறப்படுகிறது. முதல் கைதாணை ஏழு நாள்களுக்குப் பிறகு காலாவதியானது.
இருப்பினும், புதிய கைதாணை எத்தனை நாள்கள் நீடிக்கும் என்ற தகவலை புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
“யூனுக்கான கைதாணையை நீட்டிக்க, கூட்டு விசாரணை தலைமையகம் இன்று சோல் மேற்கு மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் கைதாணைக்கு விண்ணப்பம் செய்துள்ளது,” என்று ஊழல் புலனாய்வு அலுவலகம் திங்கட்கிழமை (ஜனவரி 6) அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
“கைதாணை எவ்வளவு காலம் செல்லுபடியாகும் என்ற விவரங்களை வெளியிடமுடியாது,” என்று அது கூறியது.
தொடர்புடைய செய்திகள்
செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) காலை புதிய கைதாணைக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பது குறித்து அதிகாரிகளிடமிருந்தும் சோல் நீதிமன்றத்திடமிருந்தும் எந்தக் கருத்தும் வெளிவரவில்லை.
இருப்பினும், நீதிமன்றம் கைதாணை நீட்டிப்புக்கு ஒப்புதல் வழங்காததற்கான சாத்தியம் மிகக் குறைவு என்று அலுவலகத்தின் துணை இயக்குநர் லீ ஜே சியூங் செய்தியாளர்களிடம் கூறினார்.
அரசாங்கத்திற்கு எதிராகக் கிளர்ச்சியைத் தூண்டியதாக திரு யூன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வமாகக் கைதுசெய்யப்பட்டு, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் சிறையில் அடைக்கப்படலாம் அல்லது அவருக்கு மரண தண்டனைகூட விதிக்கப்படலாம்.
அதோடு, பதவியில் இருக்கும்போதே கைதுசெய்யப்படும் முதல் தென்கொரிய அதிபராகவும் அவர் இருப்பார்.