கோலாலம்பூர்: மலேசியாவின் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமிக்கப்படும் விவகாரம் அரசியலாக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், கவனத்துடனும் நேர்மையுடனும் கையாளப்பட வேண்டும் என்று தேசிய அரண்மனை இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நீதித்துறையின் தலைமைத்துவம் உட்பட மத்திய நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம் ஒரு முக்கியமான தேசிய விவகாரம் என்றும் இது மத்திய அரசியலமைப்பிற்கு இணங்க கடுமையாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்றும் அரண்மனை வலியுறுத்தியது.
மத்திய அரசியலமைப்பின் 122பி பிரிவை மேற்கோள்காட்டி, ஆட்சியாளர்களின் பேரவையைக் கலந்தாலோசித்த பிறகு பிரதமரின் ஆலோசனையின் பேரில் நான்கு உயர்மட்ட நீதித்துறை அதிகாரிகளையும் மற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் மலேசிய மாமன்னர் நியமிக்கிறார் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தச் செயல்முறை, நாட்டின் நீதி அமைப்பிற்குள் சரிபார்ப்பு, சமநிலைக் கொள்கையைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது என்று அது கூறியது.
நீதித்துறை நியமன ஆணையச் சட்டம் 2009 குறித்தும் தேசிய அரண்மனை குறிப்பிட்டுள்ளது, இச்சட்டம், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறையை வழங்குகிறது என்று அரண்மனை விவரித்தது.
ஆனால், இந்த நியமனங்கள் குறித்து மாமன்னரிடம் ஆலோசனை வழங்கும் அதிகாரம் பிரதமரிடம்தான் உள்ளது என்று அரண்மனை மீண்டும் வலியுறுத்தியது.
“மத்திய அரசியலமைப்பின்கீழ் நியமனங்கள் தொடர்பான விவகாரம் சட்டபூர்வமாகக் கையாளப்பட வேண்டும். இதன்மூலம் மாமன்னரின் அதிகாரத்தைப் பயன்படுத்துவது எந்தத் தரப்பினராலும் அரசியலாக்கப்படாது,” எனக் கூறி அரண்மனை அறிக்கையை நிறைவுசெய்தது. மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
நீதித்துறையில் காலியாக உள்ள முக்கியப் பதவிகள் குறித்து அண்மையில் பொதுவில் எழுந்த விவாதத்துக்கும் அரசாங்கக் கலந்துரையாடல்களுக்கும் பிறகு அரண்மனையிலிருந்து இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தலைமை நீதிபதி மைமுன் துவான் மாட், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் அபாங் இஸ்கந்தர் அபாங் ஹாஷிம் இருவரும் முறையே ஜூலை 2, 3ஆம் தேதிகளில் கட்டாய ஓய்வுபெறும் வயதான 66ஐ எட்டிய பிறகு, தலைமை நீதிபதி, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் என்ற இரண்டு உயரிய பதவிகளும் காலியாகின.

