தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குப்பை பலூன்களுக்கு எதிராக உரிய ராணுவ நடவடிக்கை: தென்கொரியா எச்சரிக்கை

1 mins read
5b60ed28-0b99-4b6f-b97d-ffded8d82179
வடகொரியா அனுப்பிய பலூன்களால் தென்கொரியாவில் சிதறிய குப்பையை அதிகாரிகள் அகற்றுகின்றனர். - படம்: ஏஎஃப்பி

சோல்: வடகொரியா, தென் கொரியாவை நோக்கி குப்பைகள் நிறைந்த பலூன்களை அவ்வபோது அனுப்பி வருகிறது.

ஆனால் இதுவரை யாரும் இதற்குப் பலியாகவில்லை. ஆனால் குப்பை பலூன்களால் யாராவது இறந்தால் உரிய ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென் கொரியா எச்சரித்துள்ளது.

வடகொரியா, கடந்த மே மாதத்திலிருந்து இதுவரை 5,500க்கும் மேற்பட்ட பலூன்களை அனுப்பியிருக்கிறது. பலூன்களில் தேவையில்லாத குப்பைகள் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. இவற்றால் சில விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. தீச்சம்பவமும் ஏற்பட்டுள்ளது. தென்கொரியாவின் தெற்கேயுள்ள அரசாங்கக் கட்டடங்களையும் பலூன்கள் மோதியிருக்கின்றன.

வடகொரியாவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரசாரத்திற்கு பதிலடியாக பலூன்கள் அனுப்பப்படுவதாக பியோங்யாங் கூறியிருக்கிறது.

இந்த நிலையில் குப்பை நிறைந்த பலூன்களால் பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்பட்டால் தகுந்த வழியில் பதிலடித் தரப்படும் என்று சோல் கூறியது.

பலூன்களால் யாராவது இறந்தால் முன்கூட்டி தெரிவிக்காமல் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முப்படைகளின் இணைத் தளபதி லீ சங் ஜூன் தெரிவித்தார்.

வடகொரியா அனுப்பும் பெரும்பாலான பலூன்களில் குப்பைகள் நிறைந்துள்ளதால் எந்தவிதமான சுகாதார ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் அண்மையில் சில தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன என்றார் அவர்.

“எங்களுடைய ராணுவம், வடகொரிய ராணுவத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது. பலூன்களை அனுப்பி வைக்கும் இடங்களை அடையாளம் கண்டு வருகிறது,” என்று திரு லீ மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்