யங்கூன்: மலேசியாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட ஏறத்தாழ 1,500 மியன்மார் குடிமக்கள், உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தங்களின் சொந்த நாட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) வந்து சேர்ந்தனர்.
மலேசியாவிலிருந்து மியன்மார் குடிமக்களை ஏற்றிவந்த மூன்று கப்பல்களும் உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணிக்கு முன்பாகத் தான்லியின் கடற்படைத் தளத்தை வந்தடைந்ததாக மியன்மார் கடற்படை அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
அக்கடற்படைத் தளத்திற்கு வெளியே திரண்டிருந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள், தங்களின் உறவினர்களை அழைத்துச் செல்ல வாடகை கார்கள், பேருந்துகள் ஆகியவற்றுடன் காத்திருந்தனர்.
மியன்மாரின் ராணுவ ஆட்சியினருடன் மலேசியா செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, மலேசியாவிலிருந்து 5,000 வரையிலான மியன்மார் நாட்டவர் மீண்டும் தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.
அத்திட்டத்தின் ஒரு பகுதியாக 1,370 ஆண்கள், 79 பெண்கள், 27 பிள்ளைகள் ஆகியோர் மியன்மார் வந்தடைந்தனர்.
ஒன்றரை ஆண்டுகளாக மலேசியாவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தங்களின் மூன்று பேரப் பிள்ளைகளை அழைத்துச் செல்ல வந்த 55 வயது கியாவ் மைன்ட், “அவர்கள் சிறைக்குச் சென்றதிலிருந்து தொடர்பு கொள்ள முடியவில்லை. இப்போது ராணுவமோ அல்லது ஆயுதமேந்தியக் குழுக்களோ அவர்களை கட்டாயப்படுத்தி தங்களின் படைகளில் சேர்த்துவிடுவார்களோ என அஞ்சுகிறேன்,” எனக் கூறினார்.
2021ஆம் ஆண்டு ஏற்பட்ட ராணுவப் புரட்சிக்குப் பிறகு மியன்மார் உள்நாட்டுப் போரினால் நிலைகுலைந்துள்ளது. இந்நிலையில், நாடு திரும்பும் மியன்மார் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாது என ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.
மலேசியாவில் உள்ள பெரும்பாலான அகதிகள் ரோஹிங்கியா இனத்தவர்கள் என்றபோதிலும், கப்பலில் மியன்மார் அனுப்பப்பட்டவர்களில் எத்தனைப் பேர் ரோஹிங்யா இனத்தவர் என்பது குறித்த விவரங்களை மலேசியா வெளியிடவில்லை.
