வட்டாரப் பதற்றம்: அரபு லீக் அமைப்பின் இணைய சந்திப்புக் கூட்டம்

வட்டாரப் பதற்றம்: அரபு லீக் அமைப்பின் இணைய சந்திப்புக் கூட்டம்

2 mins read
91162d0e-caa8-47c4-9a62-7fe940880463
வட்டாரப் பதற்றம் குறித்து அரபு லீக் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் விரிவாக விவாதிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: மலாய்மெயில்

இஸ்தான்புல்: அரபு லீக் அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொள்ளும் சந்திப்புக் கூட்டத்தை இணையத்தில் நடத்த ஈராக் தயாராகி வருவதாக துருக்கியின் அதிகாரபூர்வ செய்தி ஊடகமான அனடொலு அஜன்ஸி தெரிவித்தது.

இதன் விவரங்களை மலாய்மெயில் ஊடகம் திங்கட்கிழமை (மார்ச் 23) வெளியிட்டுள்ளது.

அந்தச் சந்திப்பில் மத்திய கிழக்கு வட்டாரத்தில் நிலவும் பதற்றம் குறித்து விரிவாக விவாதிக்கப்படும். அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி மாதம் தொடங்கிய ஈரான் மீதான போருக்குப் பிறகு நடத்தப்படும் இரண்டாம் சந்திப்பாக இது அமையும் என்று அனடொலு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

ஈராக்கின் வெளியுறவு அமைச்சர் ஃபாவுட் ஹுசைன் ஓமன், எகிப்து உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் தனிப்பட்ட முறையில் தொலைபேசி உரையாடல் நடத்தியபிறகு, இத்திட்டம் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

ஓமன் வெளியுறவு அமைச்சர் படர் அல்புசைடியுடன் பேசியபோது தற்போதுள்ள பிரச்சினையை எதிர்கொள்ள அரேபிய நாடுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் முக்கியத்துவத்தை இருதரப்பும் ஏற்றுக்கொண்டதாக ஈராக்கிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

எகிப்திய வெளியுறவு அமைச்சர் படர் அப்டலெடியுடன் நடந்த உரையாடலில் சந்திப்புக் கூட்டத்தின் குறிக்கோளாக, ஒரு பிரச்சினைபற்றி மட்டுமல்லாமல் வட்டாரத்தைப் பாதித்துள்ள பலதரப்பட்ட சவால்கள் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்பது இரு அமைச்சர்களாலும் ஒத்துக்கொள்ளப்பட்டது.

மத்திய கிழக்குப் பூசல் மோசமடைந்த நிலையில் இதற்கு முன்பாக அரபு லீக் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் அவசர சந்திப்புக் கூட்டம் மார்ச் 10ஆம் தேதி நடந்தது. அந்த நேரத்தில் வட்டார நாடுகளை ஈரான் தாக்கியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அந்தக் கூட்டத்துக்குப் பிறகு, மத்திய கிழக்கில் நிலவரம் தீவிரமடைந்துள்ளது. இஸ்ரேலையும் அமெரிக்க ராணுவத் தளங்கள் இயங்கிவரும் வளைகுடா நாடுகளையும் ஈரான் தொடர்ந்து குறிவைத்துத் தாக்கிவருகிறது.

குறிப்புச் சொற்கள்