அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் ஆர்மீனியா கையெழுத்து

அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் ஆர்மீனியா கையெழுத்து

2 mins read
972d8410-04d0-4402-a3d6-2bc5bde2a6b6
ஆர்மீனியா பிரதமர் நிகோல் பாஷினியனும் (வலது), ஆர்மீனியாவுக்குச் சென்றுள்ள அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்சும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். - படம்: மக்கள் ஓசை

ஆர்மீனியா: ரஷ்யாவின் முன்னாள் நெருங்கிய கூட்டாளியான ஆர்மீனியாவும் அமெரிக்காவும் குடிமை அணுசக்தி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 11) கையெழுத்திட்டன.

ஆர்மீனியா பிரதமர் நிகோல் பாஷினியனும் ஆர்மீனியாவுக்குச் சென்றுள்ள அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்சும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

‘123 ஒப்பந்தம்’ என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம், அமெரிக்க அணுசக்தித் தொழில்நுட்பம், எரிபொருள் மற்றும் கருவிகளை ஆர்மீனியாவிற்கு சட்டபூர்வமாக ஏற்றுமதி செய்ய வழிவகை செய்கிறது. இந்த ஒப்பந்தத்தின்மூலம் ஆர்மீனியாவிற்கு ஏறக்குறைய யுஎஸ் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆரம்ப ஏற்றுமதிகளும், கூடுதலாக யுஎஸ் 4 பில்லியன் டாலர் மதிப்பிலான நீண்டகாலப் பராமரிப்பும் எரிபொருள் விநியோக ஒப்பந்தங்களும் கிடைக்கும் என ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், “நாங்கள் ஆர்மீனியாவில் அமைதியை மட்டும் ஏற்படுத்தவில்லை. ஆர்மீனியாவும் அமெரிக்காவும் இணைந்து உண்மையான செழிப்பை அடைவதற்கான சூழலையும் உருவாக்குகிறோம்,” என்றும் அவர் கூறினார்.

தனது எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய இதுவரை ரஷ்யாவையும் ஈரானையும் சார்ந்திருந்த ஆர்மீனியா, தற்போது ஒரு புதிய அணு உலை அமைப்பதற்காக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், தென் கொரியா ஆகிய நாடுகளின் நிறுவனங்களிடமிருந்து வந்துள்ள முன்மொழிதல்களைப் பரிசீலித்து வருகிறது.

இதன்மூலம் மெட்சாமரில் உள்ள பழைய ரஷ்யத் தயாரிப்பு அணுமின் நிலையத்திற்குப் பதிலாக புதிய அணுமின் நிலையங்கள் அமைக்கப்படும். தெற்கு காகசஸ் வட்டாரத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் ரஷ்யாவுக்கு இது பெரும் பின்னடைவாக அமையும்.

ஒரு குறிப்பிட்ட நாட்டை மட்டும் சாராமல், பல்வேறு நாடுகளுடன் உறவை ஏற்படுத்திக் கொள்வது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது என ஒப்பந்தம் தொடர்பாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மறுபக்கம் ரஷ்யாவின் தொழில்நுட்பம் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டது என்பதால், அமெரிக்காவின் புதிய தொழில்நுட்பங்களை விட தங்களது திட்டமே சிறந்தது என ரஷ்யா வாதிடுகிறது.

குறிப்புச் சொற்கள்