தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்கொரிய அதிபருக்கு எதிராகக் கைதாணை

2 mins read
23368984-fdef-48a6-88f3-5561835179ce
இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல். - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: தென்கொரிய அதிபர் யூன் சுக் யோலுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் கைதாணை பிறப்பித்துள்ளது.

தென்கொரியாவில் டிசம்பர் 3ஆம் தேதி ராணுவ ஆட்சியை அமல்படுத்தினார் திரு யூன். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில மணி நேரத்தில் அந்த ராணுவ ஆட்சி உத்தரவை யூன் திரும்பப்பெற்றார்.

இதன் காரணமாக யூன்மீது அரசியல் அமைப்புக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும், அதிபர் பதவியிலிருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

உயரதிகாரிகளுக்கான ஊழல் விசாரணை அலுவலகம் கைதாணை குறித்து உறுதிசெய்துள்ளது. சோலின் மேற்கு மாவட்ட நீதிமன்றத்தில் அதிகாரிகள் கைதாணை பிறப்பிக்கக் கோரி விண்ணப்பம் செய்தனர். அதற்கு நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

தென்கொரிய வரலாற்றில் அதிபர் பதவியில் இருக்கும் ஒருவருக்கு எதிராக கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை.

தற்போது பிறப்பிக்கப்பட்ட கைதாணை ஜனவரி 6ஆம் தேதி வரைசெல்லுபடியாகும். திரு யூன் கைது செய்யப்பட்டால், அவர் சோல் தடுப்பு நிலையத்தில் விசாரணைக்காக அடைக்கப்படலாம்.

எந்தக் காரணத்திற்காக நீதிமன்றம் கைதாணை வழங்கியது என்பது குறித்த தகவலை அதிகாரிகள் வெளியிடவில்லை. அதேபோல் நீதிமன்றமும் கைதாணை குறித்த தகவலுக்கு பதிலளிக்கவில்லை.

இந்நிலையில், திரு யூனுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட கைதாணை சட்டத்திற்கு எதிரானது, அது செல்லாது என்று அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, திரு யூன் எப்போது எங்கு கைது செய்யப்படுவார் என்பது குறித்து தெளிவான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

நீதிமன்ற உத்தரவை சட்டப்படி நிறைவேற்றுவோம் என்று அதிபருக்கான பாதுகாப்புப் பிரிவு ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

திரு யூனின் வீட்டைச் சோதனையிடவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அண்மையில் திரு யூனின் வீட்டைக் காவல்துறை அதிகாரிகள் சோதனை செய்ய முயற்சி செய்தனர். ஆனால், அதிபருக்கான பாதுகாப்புப் பிரிவு அதற்குத் தடையாக இருந்தது.

தற்போது நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் காவல்துறையினர் எப்போதும் வேண்டுமானாலும் யூனின் வீட்டைச் சோதனையிடக்கூடும் என்று தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்