ஜகார்த்தா: இந்தோனீசியாவில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் மோசமடைந்துள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) இரவு இந்தோனீசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மக்காசார் நகரின் நகர மன்றக் கட்டடத்துக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவைத்தனர்.
அதில் குறைந்தது மூவர் மாண்டனர்.
இருவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாகவும் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் நகர மன்றச் செயலாளர் ரஹ்மத் மப்பதோபா தெரிவித்தார்.
தீப்பற்றி எரிந்த கட்டடத்தில் அந்த மூவரும் சிக்கியதாக அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் நகர மன்றக் கட்டடத்துக்குள் அத்துமீறி நுழைந்து தீமூட்டியதாக அவர் குற்றம் சுமத்தினார்.
மாண்டோரில் பொதுமக்கள் நல்வாழ்வுப் பிரிவின் தலைவரும் பொது ஒழுங்குப் பிரிவின் உறுப்பினர் ஒருவரும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டது.
கொழுந்துவிட்டு எரிந்த கட்டடத்திலிருந்து தப்பிக்க நான்காவது மாடியிலிருந்து குதித்த ஒருவர் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
கட்டடத்துக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவைத்ததாக இந்தோனீசிய ஊடகம் தெரிவித்தது.
நகர மன்றக் கட்டடத்தின் மூன்றாவது மாடியில் கலந்துரையாடல் ஒன்று நடந்துகொண்டிருந்தபோது ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டடத்துக்குள் அத்துமீறி நுழைந்து தீவைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்தபோது மக்காசார் நகரின் மேயர், துணை மேயர், வட்டாரச் செயலாளர் ஆகியோர் அந்தக் கலந்துரையாடல் அறையில் இருந்ததாக அறியப்படுகிறது.
அவர்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
குறைந்தது நான்கு பேர் காயமடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தீ அணைக்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறினர்.
இதற்கு முன்பு இப்படி நிகழ்ந்ததில்லை என்று திரு மப்பதோபா கூறினார்.
“ஆர்ப்பாட்டங்களின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பொதுவாக நகர மன்றக் கட்டடம் மீது கற்களை வீசுவர் அல்லது கட்டடத்துக்கு முன்பாக டயர்களை எரிப்பர். இதற்கு முன்பு அவர்கள் கட்டடத்துக்குள் அத்துமீறி நுழைந்ததும் இல்லை, தீவைத்ததும் இல்லை,” என்றார் அவர்.