பேங்காக்: தாய்லாந்தின் தென்பகுதியில் கடந்த வாரயிறுதியில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தீவைப்புச் சம்பவங்களில் குறைந்தது மூவர் காயமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிளர்ச்சியாளர்கள் எனச் சந்தேகிக்கப்படுவோர் அரசுக் கட்டடங்கள், கடைகள், வாகனங்கள், மின்சாரக் கம்பங்கள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட இடங்களுக்குத் தீ வைத்ததாகக் கூறப்பட்டது.
மலேசிய எல்லையை ஒட்டியுள்ள அம்மாநிலங்களில் 2004ஆம் ஆண்டில் ‘பாரிசான் ரெவொலூசி நேஷனல்’ (பிஆர்டிஎன்) எனும் பிரிவினைவாத இயக்கம் தீவிரமாகச் செயல்படத் தொடங்கியதிலிருந்து இதுவரை 7,800க்கும் அதிகமானோர் வன்முறைகளில் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வாரயிறுதியில் மட்டும் நாரதிவாட்டில் 40, யாலாவில் 21, பட்டானியில் 15, சோங்க்லாவில் இரண்டு என அந்நாட்டின் நான்கு தென் மாநிலங்களில் குறைந்தது 78 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அத்தாக்குதல்களுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
பெரும்பாலான தாக்குதல்கள் சனிக்கிழமை (ஆகஸ்ட் 22) மாலை பட்டானி, யாலா, நாரதிவாட், சோங்க்லாவின் சில பகுதிகள் ஆகியவற்றில் நடந்தேறின; ஞாயிற்றுக்கிழமையன்றும் (ஆகஸ்ட் 23) சில சம்பவங்கள் தொடர்ந்தன.
நாரதிவாட் மாநிலத்தில் ரயில் பாதை ஒன்று வெடிபொருள்களால் தகர்க்கப்பட்டதை அடுத்து, அப்பகுதியில் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
நாரதிவாட்டில் அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். நிலைமையைச் சமாளிக்கும் பொருட்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி அவசரக் கூட்டம் நடத்திய தாய்லாந்துப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராகுல், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பாதுகாப்புப் படையினரைக் கேட்டுக்கொண்டார்.
தாய்லாந்தின் தென்பகுதிகளில் முஸ்லிம்களும் மலாய் இனத்தவரும் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். தங்களுக்குக் கூடுதலாகத் தன்னாட்சி அதிகாரம் அல்லது தனிநாடு கோரி பல ஆண்டுகளாக அவர்கள் போராடி வருகின்றனர்.
அப்பகுதியில் போராடிவரும் ‘பிஆர்டிஎன்’ அமைப்புடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்குத் தாய்லாந்து அரசு முயன்று வரும் சூழலில் இத்தாக்குதல்கள் நடந்துள்ளன.


