சிட்னி: மெல்பர்ன் நகரில் யூத திருக்கோயில் ஒன்றில் வேண்டுமென்றே தீவைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட சம்பவம், பயங்கரவாதச் செயலாக இருக்கலாம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் டிசம்பர் 8ஆம் தேதி தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கு எதிரான கொள்கைகளை ஆஸ்திரேலிய அரசாங்கம் வகுத்ததன் மூலம் இந்தக் குற்றம் நிகழ ஊக்குவித்ததாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறியதை அடுத்து அல்பனீஸ் பெர்த் நகரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
“மெல்பர்ன் யூத ஆலயத்தில் நடந்த அட்டூழியம் யாவும் சமூகத்தை அச்சுறுத்துவதற்காகத் திட்டமிடப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால், எனது தனிப்பட்ட கண்ணோட்டத்தில் தீவைப்பு நிச்சயமாகப் பயங்கரவாதத்தைக் குறிப்பதாக உள்ளது,” என்றார் அவர்.
யூத வழிபாட்டுத் தலமான அடாஸ் இஸ்ரேல் யூத ஆலயத்தில் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி காலை நிகழ்ந்த தீச்சம்பவத்தில் ஒருவர் காயமுற்றதுடன் பேரளவில் சேதமும் ஏற்பட்டுள்ளது.
வேண்டுமென்றே தீ வைத்ததாகச் சந்தேகிக்கப்படும் இரு நபர்களைக் காவல்துறையினர் இன்னமும் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.