சாலை விபத்துகளை உடனடியாகக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு: மலேசியா யோசனை

1 mins read
a4e7e688-b5d8-4a70-b632-b285b8886487
பிப்ரவரி மாதம் அறிமுகம் கண்ட புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை முழுமையாக நாடு முழுவதும் செயல்படுத்த மலேசிய அரசாங்கத்திடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

பெட்டாலிங் ஜெயா: சாலை விபத்துகளைக் கண்டறிய மலேசிய அரசாங்கம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக்கூடும்.

சாலை விபத்து நிகழ்ந்ததும் உடனடியாக அதுபற்றியத் தகவலைப் பெறுவதன் மூலம் விரைவுச்சாலைகளில் மீட்புப் பணிக்கான தாமதத்தைக் குறைக்க முடியும்.

அந்த அம்சத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கைகொடுக்கும்.

அதற்காக, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தானியக்க சாலை சம்பவம் கண்டறியும் முறை (Arids) உருவாக்கப்பட்டு உள்ளது.

விபத்து நிகழ்ந்ததும் உடனடியாகத் தகவல் அளிக்கும் அந்தத் தொழில்நுட்பம் தற்போது முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்று சாலைப் பாதுகாப்பு நிபுணர் இணைப் பேராசிரியர் லாவ் தெய்க் ஹுவா கூறினார்.

“பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட அந்தத் தொழில்நுட்பம், கிள்ளானிலும் கூச்சிங்கிலும் 1,000 கிலோமீட்டர் தூரத்திலான விரைவுச்சாலைகளிலும் இதர சாலைகளிலும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது.

“மலேசியாவில் இன்னும் அந்தத் தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்படாத நிலையில் புருணையும் சீனாவின் சியான் நகரமும் அதனை தங்களது சாலைப் பாதுகாப்பு மேம்பாட்டுக்குப் பயன்படுத்துகின்றன.

“எனவே, இந்தப் புதிய தொழில்நுட்பத்தை மலேசியா முழுவதும் முழுமையாகப் பயன்படுத்துவதற்கான அவசியம் இருப்பது குறித்து மலேசிய விரைவுச்சாலை ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம்,” என்றார் டாக்டர் லாவ்.

குறிப்புச் சொற்கள்