செயற்கை நுண்ணறிவுப் படை அமைக்கப்படும்: டிரம்ப்

செயற்கை நுண்ணறிவுப் படை அமைக்கப்படும்: டிரம்ப்

படம்: ராய்ட்டர்ஸ்

20 Sep 2026 - 8:00 pm

1 mins read

வாஷிங்டன்: அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் மனிதர்களுக்கும் சொத்துகளுக்கும் நேரிடும் அபாயங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கவலை அதிகரித்து வருகிறது.

இருப்பினும், அந்த ‘அற்புதமான’ துறையின் வளர்ச்சியைத் தாம் எந்த வகையிலும் தடுக்கப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

மாறாக, ஏஐ துறையைக் காக்கவும் கண்காணிக்கவும் ‘செயற்கை நுண்ணறிவுப் படை’ அமைக்கப்படும் என்றும் புதிய ‘செயற்கை நுண்ணறிவு ஆலோசகர்’ நியமிக்கப்படுவார் என்றும் அவர் சனிக்கிழமை (செப்டம்பர் 19) சமூக ஊடகப் பதிவில் தெரிவித்தார்.

தவறான செயல்பாடுகளைத் தற்போதைய குற்றவியல், சிவில் நீதி அமைப்புகள் மூலமே எளிதாகக் கையாள முடியும் என்று திரு டிரம்ப் குறிப்பிட்டார். புதிய அரசாங்கக் கட்டுப்பாடுகள் தேவையில்லை என்ற அவரின் கருத்தை அவரின் முன்னாள் ஆலோசகர் டேவிட் சாஸ்சும் ஆதரித்துள்ளார்.

செப்டம்பர் 25ஆம் தேதி சீன அதிபர் ஸி ஜின்பிங்கை டிரம்ப் சந்திக்கவுள்ளார். செயற்கை நுண்ணறிவுத் துறையில் உலகளாவிய தலைமைத்துவம் பெற அமெரிக்காவும் சீனாவும் போட்டியிட்டு வருகின்றன.

அதிகக் கட்டுப்பாடுகள் அமெரிக்க நிறுவனங்களின் போட்டித்திறனைக் குறைக்கும் என்று தொழில்நுட்பத் தலைவர்கள் வாதிடுகின்றனர்.

இதனிடையே, ஏஐ பாதுகாப்பு, வணிகம் உள்ளிட்ட பொருளியல் விவகாரங்கள் குறித்து விவாதிக்க அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட், சீனத் துணைப் பிரதமர் ஹே லிஃபெங்கை நியூயார்க்கில் ஞாயிற்றுக்கிழமை சந்திக்கவிருந்தார்.

குறிப்புச் சொற்கள்
ஏஐசெயற்கை நுண்ணறிவுடோனல்ட் டிரம்ப்