லண்டன்: மருத்துவத் துறையை உருமாற்றும் ஆற்றல் கொண்டதாகப் பாராட்டப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் மருத்துவர்கள் தங்கள் திறனை இழக்க நேரிட்டிருப்பதாகப் புதிய ஆய்வு ஒன்று குறிப்பிட்டுள்ளது..
குடலில் உள்ள புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய சுகாதார நிபுணர்களுக்குக் கைகொடுக்கிறது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்.
ஆனால் அது நீக்கப்பட்டதை அடுத்து புற்றுநோய்க் கட்டிகளைக் கண்டறிவதற்கான மருத்துவர்களின் ஆற்றல் கிட்டத்தட்ட 20 விழுக்காடு குறைந்ததாக ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியிடப்பட்ட லான்சட் ஆய்வு குறிப்பிட்டது.
உலகளவில் உள்ள சுகாதாரக் கட்டமைப்புகள் நோயாளிகளுக்குத் திறம்பட சிகிச்சை அளிக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.
செயற்கை நுண்ணறிவைக் கொண்டு மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான சோதனை முயற்சிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் இவ்வாண்டு 11 மில்லியன் பவுண்ட் நிதியை அறிவித்தது.
அந்தச் சோதனை முயற்சியில் பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவின் பரிந்துரைகள்மீது மருத்துவர்கள் அளவுக்கு அதிகமாகச் சார்ந்திருக்கத் தொடங்கியதால் செயற்கை நுண்ணறிவின் உதவி இல்லாமல் அறிவாற்றல் சார்ந்த தீர்மானங்களை எடுக்கும்போது அவர்களின் உற்சாகம், கவனம், பொறுப்பு ஆகியவை குறைந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.
போலந்தில் உள்ள நான்கு என்டோஸ்காப்பி நிலையங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு அறிமுகம் செய்யப்படுவதற்கு மூன்று மாதங்கள் முன்னும் அது அறிமுகமாகி மூன்று மாதங்கள் கழித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதில் மருத்துவர்கள் எவ்வளவு வெற்றிகரமாகச் சோதனைகளை நடத்தினர் என்பது ஒப்பிடப்பட்டது.
சோதனையில் ஈடுபட்ட ஓஸ்லோ பல்கலைக்கழக ஆய்வாளரான பேராசிரியர் யுய்சி மோரி, செயற்கை நுண்ணறிவு இன்னும் ஆற்றல் வாய்ந்தது என்பதால் அதை நீக்கினால் ஏற்படும் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றார்.
மெசசுசெட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் இவ்வாண்டு நடத்தப்பட்ட ஆய்விலும் அதே முடிவு தெரியவந்தது.
ஓபன்ஏஐயின் சேட்ஜிபிடியைப் பயன்படுத்தி கட்டுரைகளை எழுதும்போது மூளையின் செயல்பாடும் அறிவாற்றலும் குறைந்து காணப்பட்டது.