ரோம்: இத்தாலியில் முதன்முறையாகச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு நாளேடுகள் அச்சிடப்பட்டுள்ளன.
உலக நாடுகளில் அத்தகைய நாளேடுகள் அச்சிடப்படுவது இது முதன்முறை.
இல் ஃபோக்லியோ (Il Foglio) என்ற செய்தி நிறுவனம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒரு மாதத்துக்கு நாளேடுகளை அச்சிட முடிவெடுத்துள்ளது.
நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 29,000 செய்தித்தாள்களை அச்சிடும் நிறுவனம், மாரச் 18ஆம் தேதி செயற்கை நுண்ணறிவால் முதல் செய்தித்தாளை வெளியிட்டது.
அதில் வழக்கமான பக்கங்களுடன் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட 4 பக்க சிறப்புத் தொகுப்பு இடம்பெற்றது.
இணையத்திலும் பதிவேற்றப்பட்ட அந்தத் தொகுப்பில் 22 செய்திகளும் மூன்று தலையங்கங்களும் இருந்தன.
இல் ஃபோக்லியோ (Il Foglio) செய்தி நிறுவனத்தில் ஏறக்குறைய 20 செய்தியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
அவர்கள் ஓப்பன் ஏ.ஐ. நிறுவனத்தின் சேட்ஜிபிடி (ChatGPT) தொழில்நுட்பத்தைக் கொண்டு செய்திகளைத் தயாரித்தனர். குறிப்பிட்ட ஒரு தலைப்பை எடுத்து அது எப்படி இருக்கவேண்டும் என்று தெரிவித்தால் போதும். கொஞ்ச நேரத்தில் இணையத்தில் உள்ள தகவல்களைக் கொண்டு செய்தியைக் கொடுத்துவிடுகிறது சேட்ஜிபிடி தொழில்நுட்பம்.
தொடர்புடைய செய்திகள்
பிரதமர் ஜியோர்ஜியா மெலனியின் உரை குறித்த செய்தி, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலான அண்மைய தொலைபேசி உரையாடல் பற்றிய தலையங்கம், ஆடை அலங்கார அணிவகுப்பு ஆகியவை செயற்கை நுண்ணறிவைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சில செய்திகள்.
செயற்கை நுண்ணறிவு அனைத்து எதிர்பார்ப்புகளையும் மீறி செயல்படுகிறது என்றார் இல் ஃபோக்லியோ நிறுவனத்தின் செய்தியாசிரியர்.
புதிய நடைமுறையின்மூலம் முதல் நாளிலேயே செய்தித்தாளின் விற்பனை 60 விழுக்காடு கூடியதாகவும் அவர் சொன்னார்.
வாசகர்களும் பெரியளவில் உற்சாகமடைவதாக இல் ஃபோக்லியோ நிறுவனம் சொன்னது.