தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மியன்மாருக்குத் தேர்தல் அதிகாரிகளை அனுப்ப ஆசியான் ஆலோசனை

2 mins read
41b04d6e-17aa-45ed-9a49-100580d8e618
மியன்மாரில் 2021ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தது. அந்நாட்டில் தற்போதும் பல இடங்களில் பதற்றம் நிலவுகிறது. - படம்: ஏஎஃப்பி

கோலாலம்பூர்: மியன்மாரில் இவ்வாண்டு இறுதியில் தேர்தல் நடத்த அந்நாட்டு ராணுவம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ஆசியான் அமைப்பு நாடுகளில் உள்ள தேர்தல் கவனிப்பாளர்களைத் தங்களது நாட்டிற்கு வருகை புரியுமாறு மியன்மார் ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது.

தேர்தல் கவனிப்பாளர்களை மியன்மாருக்கு அனுப்புவது குறித்து ஆசியான் நாடுகள் இம்மாத இறுதியில் நடக்கும் உச்சநிலை மாநாட்டில் ஆலோசிக்கவுள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

“ஆசியான் அமைப்பில் உள்ள எல்லா நாடுகளுக்கும் மியன்மார் ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது. மலேசியாவின் சார்பில் மலேசியத் தேர்தல் ஆணையம் அழைக்கப்பட்டுள்ளது,” என்று அமைச்சு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) இரவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

மியன்மாரில் டிசம்பர் மாதம் 28ஆம் தேதி தேர்தல் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் கட்டங்கட்டமாக நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 9) மியன்மார் தலைநகர் நேப்பிடாவில் மலேசிய வெளியுறவு அமைச்சர் முகம்மது ஹாசன் மற்றும் மியன்மார் ராணுவத் தலைவர் மின் ஆங் லைங் சந்தித்தனர். அதைத்தொடர்ந்து ஆசியான் நாட்டுத் தேர்தல் கவனிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மியன்மார் தேர்தல் போலியான ஒன்று என்று மேற்கத்திய நாடுகளும் அரசியல் கவனிப்பாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தங்களுக்கு ஏற்ற வேட்பாளர்களையும் கட்சிகளையும் தேர்தலில் நிறுத்தி மியன்மாரை ராணுவம் ஆட்சி செய்யத் திட்டமிடுகிறது என்று மேற்கத்திய நாடுகள் குறைகூறுகின்றன.

மியன்மாரில் 2021ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு அரங்கேறியது. ஆட்சியில் இருந்த ஆங் சான் சூச்சி சிறைபிடிக்கப்பட்டார்.

நாட்டில் பல இடங்களில் வன்முறை வெடித்தன. ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிப் படைகளும் பல இடங்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தன.

மியன்மார் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு 2022ஆம் ஆண்டு முதல் ஆசியான் மாநாடுகளில் மியன்மார் ராணுவத் தலைவர்கள் கலந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டது.

தற்போது ஆசியான் அமைப்புக்கு மலேசியா தலைமை தாங்குகிறது. ஆசியான் அமைப்பில் சிங்கப்பூர், புரூனை, கம்போடியா, இந்தோனீசியா, லாவோஸ், பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, வியட்னாம், மியன்மார் உறுப்பினர்களாக உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்