சிபு: தென்கிழக்காசிய நாடுகள், கடல்துறை விவகாரங்கள் தொடர்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி அதற்கென ஒரு நிலையத்தை நிறுவ ஒப்புக்கொண்டுள்ளன.
ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் தடையைப் போன்ற சூழலைத் தென் சீனக் கடலிலும் எதிர்கொள்வதாகக் குறிப்பிட்ட பிலிப்பீன்ஸ், அதிலிருந்து மீண்டுவர புதிய நிலையம் உதவும் என்றது.
கடல்துறை விவகாரங்களுக்கும் கொள்கைகளுக்கும் ஒரு மத்தியக் களஞ்சியத்தை ஆசியான் அமைக்கும். அது 11 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஆசியானை வழிநடத்தும் என்று பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினன்ட் மார்கோஸ் ஜூனியர் கூறினார்.
இந்த வாரம் நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாட்டை ஏற்று நடத்திய திரு மார்கோஸ், ஆசியான் கடல்துறை நிலையத்தைப் பிலிப்பீன்ஸ் பார்த்துக்கொள்ளும் என்று பரிந்துரைத்தார்.
அந்த நிலையம், தென் சீனக் கடலில் ஒழுங்கை கடைப்பிடிப்பதுடன் பாதுகாப்பையும் தென் சீனக் கடல் வழியாகப் பயணம் செய்வதற்கான சுதந்திரத்தையும் கட்டிக்காக்கும் என்று திரு மார்கோஸ் குறிப்பிட்டார்.
சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் மீன்பிடிப்பு, மனிதக் கடத்தல் நடவடிக்கைகள் ஆகியவற்றையும் புதிய நிலையம் கண்காணிக்கும் என்றார் அவர்.
“தென் சீனக் கடல் வழியாகப் பயணம் செய்யும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகம். அதை எப்படிக் கையாள்வது, எவ்வாறு கண்காணிப்பது போன்றவற்றை நாம்தான் தீர்மானிக்கவேண்டும்,” என்றார் திரு மார்கோஸ்.
தென் சீனக் கடலைச் சுற்றியுள்ள நாடுகள் ஏற்கெனவே அதைச் செய்தாலும் அவைத் தனித்தனியாக அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் திரு மார்கோஸ் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
ஈரான் போரால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்ட விவகாரம் கடல்துறைப் போக்குவரத்துக்கான பாதைகளைத் தொடர்ந்து திறந்துவைப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ஆசியான் நாடுகளே ஆக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
“அத்தகைய ஒரு நிலை தென் சீனக் கடலில் ஏற்பட்டால் அதன் பின்விளைவுகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பயங்கரமாக இருக்கும்,” என்று திரு மார்கோஸ் எச்சரித்தார்.
மலாக்கா நீரிணை வழியாகக் கடந்துசெல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிப்பது பற்றி இந்தோனீசியா கடந்த மாதம் தெரிவித்தது பதற்றத்தை மேலும் அதிகரித்தது.
ஆனால் அந்த முடிவு அறிவிக்கப்பட்டவுடனே மீட்டுக்கொள்ளப்பட்டது.

