தாய்லாந்தில் மியன்மார் எதிர்க்கட்சிக் குழுக்களைச் சந்தித்த ஆசியான் தூதர்

தாய்லாந்தில் மியன்மார் எதிர்க்கட்சிக் குழுக்களைச் சந்தித்த ஆசியான் தூதர்

2 mins read
6ce42c90-ff1b-448f-81bd-c561f525e488
ஆசியான் சிறப்புத் தூதர் தெரேசா லசாரோ, ஜூலை 13ஆம் தேதி மியன்மாரின் சிறுபான்மை இனக் கிளர்ச்சிக் குழுக்களையும் அரசாங்க ஆதரவு பேச்சுவார்த்தைக் குழுவையும் சந்தித்தார். - படம்: ஏஎஃப்பி

உள்நாட்டுப் போரைச் சமாளிக்கும் முயற்சியில், மியன்மார் விவகாரங்களுக்கான ஆசியான் சிறப்புத் தூதர், சிறுபான்மை இனக் கிளர்ச்சிக் குழுக்கள் மற்றும் அரசாங்க ஆதரவு பேச்சுவார்த்தைக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்றும் இரு தரப்பினரும் உரையாடலுக்குத் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர் என்றும் பிலிப்பீன்ஸ், செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) தெரிவித்தது.

இந்தப் பேச்சுவார்த்தைகள் ஜூலை 13ஆம் தேதி, தாய்லாந்தில் நடைபெற்றன. இதற்கு ஒரு நாள் முன்னதாக, 11 உறுப்பு நாடுகளைக் கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் (ஆசியான்) வெளியுறவு அமைச்சர்களுக்கும், அவர்களின் மியன்மார் நாட்டு வெளியுறவு அமைச்சருக்கும் இடையே ஒரு தனிச் சந்திப்பு நடைபெற்றது. 

2021ல் மியன்மாரில் நிகழ்ந்த நாடு தழுவிய மோதலைத் தூண்டிய ராணுவப் புரட்சிக்குப் பிறகு, அவர்கள் நேருக்கு நேர் நடத்திய முதல் சந்திப்பு இது.

ஆசியானின் ஐந்தாண்டு கால ‘ஐந்து அம்ச ஒருமித்த கருத்து’ அமைதி முன்னெடுப்பைக் கடைப்பிடிக்கத் தவறியதால், மியன்மாரின் ராணுவ ஆதரவு பெற்ற தலைமை உயர்மட்ட ஆசியான் கூட்டங்களில் கலந்துகொள்ளத் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ஜூலை 12ஆம் தேதியன்று நடைபெற்ற கூட்டம் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என அக்கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் நம்புகின்றனர்.

ஆனால், முன்னாள் ராணுவ ஆட்சித் தலைவரும் தற்போதைய அதிபருமான மின் ஆங் ஹ்லைங் தலைமையிலான, மியன்மாரின் புதிய பெயரளவிலான மக்கள் அரசாங்கத்துடன் மீண்டும் உறவை ஏற்படுத்துவது ஆசியானின் செல்வாக்கைக் குறைக்கக்கூடும் என்று சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஆசியான் சிறப்புத் தூதரும் , பிலிப்பீன்சின் வெளியுறவு அமைச்சருமான தெரேசா லசாரோ, மியன்மாரின் சில கிளர்ச்சிக் குழுக்களின் பிரதிநிதிகளையும், ராணுவத்தால் உருவாக்கப்பட்ட தேசிய ஒற்றுமை மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைக் குழுவையும், அனைவரையும் உள்ளடக்கிய தேசிய அரசியல் உரையாடலுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காகச் சந்தித்தார் என்று பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.

“அனைத்துத் தரப்பினரும் பேச்சுவார்த்தை செயல்முறைக்குத் தங்கள் திறந்த மனப்பான்மையை வெளிப்படுத்தியதோடு, ஆக்கபூர்வமான உரையாடலின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்,” என்று அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
மியன்மார்ஆசியான்சிறுபான்மைபிலிப்பீன்ஸ்