வட்டாரப் பிரச்சினைகளை அலசி ஆராயும் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள்

வட்டாரப் பிரச்சினைகளை அலசி ஆராயும் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள்

2 mins read
5e77510e-4359-43db-8ecf-e31392446f73
59வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்களின் உச்சநிலை மாநாடு நடைபெறும் பிலிப்பீன்ஸ் அனைத்துலக மாநாட்டு நிலையத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

இவ்வாரம், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டு அமைப்பின் (ஆசியான்) வெளியுறவு அமைச்சர்கள் மணிலாவில் கூடி பேசவிருக்கின்றனர்.

அப்போது வட்டாரத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, மியன்மாரில் நீடிக்கும் நெருக்கடி, தென்சீனக் கடல் பதற்றங்கள் உள்ளிட்டவை பற்றியும் அமைச்சர்கள் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டு முழுவதும் ஆசியான் எதிர்நோக்கும் சவால்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் வட்டார அமைப்பு மறுஆய்வு செய்யவிருக்கிறது.

கடந்த மே மாதம் செபுவில் (Cebu) நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாட்டில், மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களால் ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறை, உயர்ந்து வரும் எண்ணெய் விலை, உலகளாவிய வர்த்தகப் பாதைகளில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் ஆகியவை வட்டாரக் கவலைகளாக முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் இரண்டு மாதங்களுக்குள் உலகின் பல பகுதிகளுடன் ஒப்பிடும்போது தென்கிழக்கு ஆசியா, உலகளாவிய சவால்களை ஓரளவுக்குச் சிறப்பாகக் கையாண்டுள்ளதாக பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர்.

தென்கிழக்காசிய ஆய்வுக் கழகத்தின் (ஐஎஸ்இஏஎஸ்) யூசோப் இஷாக் கல்விக்கழகத்தின் ஷேரன் சீ, “ஆசியான் தனது எரிசக்தி பங்காளிகளை பரவலாக்கியதால் குறிப்பிட்ட விநியோகிப்பாளர்களை மட்டுமே சார்ந்திருப்பதைக் குறைத்துள்ளது, எரிபொருள் பற்றாக்குறையின் தாக்கத்தைத் தணிக்கக் குறுகிய கால நடவடிக்கைகளைச் செயல்படுத்தியதன் மூலம் நெருக்கடிகளை ஆசியான் சமாளித்துள்ளது,” என்றார்.

இருப்பினும், நீண்டகால எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கைகள் போதாது என்ற அவர், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கிச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

புதைபடிவ எரிபொருள்களை இவ்வட்டாரம் சார்ந்து இருப்பதைக் குறைப்பதே இதற்கான உண்மையான தீர்வு என்றும் அவர் கூறினார்.

மேலும், உறுப்பு நாடுகள் தங்களுக்குள் எல்லையைக் கடந்து மின்சாரத்தைப் பகிர்ந்து கொள்ள வழிவகுக்கும் ஒரு முதன்மையான வட்டாரத் திட்டமான ‘ஆசியான் மின்சாரக் கட்டமைப்பை’ விரைவில் செயல்படுத்த வேண்டும். இந்தத் திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கங்கள் உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த வேண்டும், மின்சாரக் கட்டமைப்புகளை நவீனமயமாக்க வேண்டும், மின்கலச் சேமிப்பு தொழில்நுட்பங்களில் முதலீடு செய்ய வேண்டும், ஒழுங்குமுறை கட்டமைப்புகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
ஆசியான்வெளியுறவு அமைச்சர்உச்சநிலை மாநாடுகூட்டம்