துணைக் குழுக்களால் ஆசியான் முக்கியத்துவத்தை இழக்கக்கூடும்: தலைமைச் செயலாளர்

துணைக் குழுக்களால் ஆசியான் முக்கியத்துவத்தை இழக்கக்கூடும்: தலைமைச் செயலாளர்

2 mins read
4467cfcc-7134-40dd-bc13-dd2a0f73f9a2
ஜகார்த்தாவில் உள்ள ஆசியான் தலைமையகத்தில் நடைபெற்ற 3வது ஆசியான் நிபுணத்துவக் குழு உச்சநிலை மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் காவ் கிம் ஹொர்ன் உரையாற்றினார்.  - படம்: சிங்கப்பூர் அனைத்துலக விவகாரங்கள் நிலையம்

ஜகார்த்தா: ஆசியான் அமைப்பிற்குள் புதிய சிறிய துணைக் குழுக்கள் அதிகரித்து வருவதால், கூட்டமைப்பின் முக்கியத்துவம் காலப்போக்கில் குறையும் அபாயம் இருப்பதாக அதன் தலைமைச் செயலாளர் காவ் கிம் ஹொர்ன் திங்கட்கிழமை (செப்டம்பர் 14) எச்சரித்துள்ளார்.

பாதுகாப்பு உள்ளிட்ட மற்ற சவால்களை எதிர்கொள்ள சிறிய அளவிலான குழுக்களை அமைக்க நாடுகள் முயல்வதே அதற்குக் காரணம் என்றார் அவர்.

இந்தோ-பசிபிக் வட்டாரம் முழுதும் புதிய கூட்டணிகளும் பங்காளித்துவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக ஆசியான் உருவாக்கிய வட்டார அமைப்புகள் தொடர்ந்து பொருத்தமானதாகவும் நாடுகளை ஒன்றிணைக்கும் திறன் கொண்டதாகவும் இருப்பதை அது உறுதி செய்ய வேண்டும் என்று திரு காவ் கூறினார்.

“இந்தச் சிக்கலான வட்டாரக் கட்டமைப்பு பிளவுபட்டு, ஆசியான் தலைமையிலான செயல்பாடுகள், அவற்றின் ஒத்திசைவு, முக்கியத்துவம் அல்லது ஒருங்கிணைக்கும் ஆற்றலை இழந்துவிடாமல் இருப்பதை எவ்வாறு உறுதி செய்வது என்பதே ஆசியானின் முன்னால் உள்ள கேள்வி,” என்றார் அவர்.

2027ஆம் ஆண்டில் ஆசியான் அமைப்பின் 60வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பிலிப்பீன்சிடமிருந்து சிங்கப்பூர் ஆசியான் தலைமைப் பொறுப்பை ஏற்கும்போது இந்த விவகாரம் கூடுதல் முக்கியத்துவம் பெறும்.

60 ஆண்டுகால வட்டார ஒத்துழைப்பைக் கொண்டாடுவதற்கு மட்டுமல்லாமல், ஆசியானின் நிறுவனங்களும் செயல்படும் முறைகளும் மிகவும் மாறியுள்ள இப்போதைய உலகிற்கு இன்னும் பொருத்தமாக இருக்கின்றனவா என்ற கேள்வியை எழுப்புவதற்கான வாய்ப்பாக இந்த முக்கிய மைல்கல் அமைய வேண்டும் என்று அவர் கூறினார்.

ஜகார்த்தாவில் உள்ள ஆசியான் தலைமையகத்தில் நடைபெற்ற மூன்றாவது ஆசியான் நிபுணத்துவக் குழு உச்சநிலை மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் திரு காவ் உரையாற்றினார். அதில் அரசதந்திரிகள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அந்த இரண்டு நாள் மாநாட்டைச் சிங்கப்பூர் அனைத்துலக விவகாரங்கள் நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.

குறிப்புச் சொற்கள்
ஆசியான்அமைப்புதுணைகுழுதலைமைச் செயலாளர்எச்சரிக்கை