ஹனோய்: ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள், பேங்காக்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) அதிகாரபூர்வமற்ற முறையில் மியன்மார் வெளியுறவு அமைச்சரைச் சந்திக்கவிருக்கின்றனர்.
தாய்லாந்து வியட்னாமும் வியாழக்கிழமை அந்தத் தகவலை வெளியிட்டன.
இவ்வாண்டு ஏப்ரல் மாதம் மியன்மாரில் நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து, அங்கு ராணுவத்தின் ஆதரவோடு புதிய அரசாங்கம் அமைந்துள்ளது.
2021ஆம் ஆண்டு ராணுவப் புரட்சியின் மூலம் அங்கு ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பின்னர் உள்நாட்டுப் போர் மூண்டது. அதனால் ஆசியான் உச்சநிலை மாநாடுகளில் இருந்து மியான்மாரின் தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டனர்.
இந்நிலையில், தங்கள் மீதான தடையை நீக்குமாறு அவர்கள் கோரிவரும் சூழலில் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு நடைபெறவுள்ளது.
“பேங்காக்கில் நடைபெறவிருக்கும் சந்திப்பு, ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் நேரடியாகக் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் மியான்மாரில் சமரசப் பேச்சை ஊக்குவிக்கவும் ஒரு வாய்ப்பாக அமையும்,” என்று வியட்நாமிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் பாம் து ஹாங் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அமைச்சர்களின் சந்திப்பு நடைபெறவிருப்பதைத் தாய்லாந்து வெளியுறவு அமைச்சும் உறுதிப்படுத்தியது.

