ஆசியான் ஒன்றுபட்டு, நடுநிலையோடு மீள்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்: இந்தோனீசிய நிதியமைச்சர்

ஆசியான் ஒன்றுபட்டு, நடுநிலையோடு மீள்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்: இந்தோனீசிய நிதியமைச்சர்

2 mins read
7b464ba2-3579-4cf5-b56e-0428d7f1834a
அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகியவற்றுக்கு இடையிலான ஆதிக்க போட்டாபோட்டிக்கான களமாக ஆசியான் மாறிவிடக்கூடாது என்று இந்தோனீசிய நிதியமைச்சர் டாக்டர் ஸ்ரீ முல்யானி இந்திராவதி வலியுறுத்தினார். - படம்: இந்தோனீசிய நிதியமைச்சு

ஜக்கார்த்தா: அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான ஆதிக்க போட்டாபோட்டிக்குக் களமாக ஆசியான் மாறிவிடக்கூடாது என்று இந்தோனீசிய நிதியமைச்சர் ஸ்ரீ முல்யானி இந்திராவதி வலியுறுத்தியுள்ளார்.

அத்தகைய நிலையைத் தவிர்க்கும் நோக்கில் ஒத்துழைப்பையும் வளர்ச்சியையும் ஆதரிக்கும் விதமாக, ஆசியான் நாடுகள் தொடர்ந்து ஒற்றுமையுடன் நடுநிலை வகிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மின்னிலக்கத் தொழில்நுட்பம், எல்லை கடந்த பணம் செலுத்தும் முறை, நீடித்த நிலைத்தன்மை மிக்க நிதி, பசுமை எரிபொருளுக்கு மாறுதல், மின்வாகனங்கள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம் அதனை எட்ட முடியும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டார்.

“அந்த நாடுகளுக்கு இடையிலான போட்டிக்கு எளிதில் ஆசியான் களமாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதனால், இந்த வட்டாரத்தில் வளப்பத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்த நாம் தொடர்ந்து அமைதி, நிலைத்தன்மையுடன் ஒத்துழைப்போம் என்ற செய்தியை உலகுக்கு அறிவிக்க வேண்டும். நாம் ஒன்றுபட்டிருப்பது அவசியம்,” என்று டாக்டர் ஸ்ரீ முல்யானி கூறினார்.

அமெரிக்கா பணவீக்கத்தால் திணறுகிறது. உக்ரேனியப் போர் நீள்வதால் ஐரோப்பா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 கிருமிப் பரவலின்போது எல்லைகளை மூடியதால் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்ல சீனா போராடுகிறது என்பதை அவர் சுட்டினார்.

“உலகளாவிய சூழல் தொடர்ந்து வலுவின்றிக் காணப்படுகிறது. நிச்சயமற்ற தன்மையும் பிரிவினையும் தொடர்கின்றன. எனவே, மீட்சி, மீள்திறனுடன்கூடிய வளர்ச்சி ஆகியவற்றில் ஆசியான் கவனம் செலுத்த இது உகந்த நேரம்,” என்று டாக்டர் ஸ்ரீ முல்யானி குறிப்பிட்டார்.

ஏப்ரல் மாதம் இந்தோனீசியாவில் நடைபெற்ற 42வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில், ஆசியான் வட்டாரத்தில் பணம் செலுத்தும் முறையை மேம்படுத்தும் ஒப்பந்தத்தில் ஆசியான் தலைவர்கள் கையெழுத்திட்டனர்.

வர்த்தகப் பணப் பரிமாற்றத்திற்கு அமெரிக்க டாலர் போன்ற, தற்போது பயன்படுத்தப்படும் நாணயங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க அது உதவும்.

அந்த முயற்சியைப் பாராட்டிய இந்தோனீசிய நிதியமைச்சர், பணப் பரிமாற்றம், வர்த்தக முதலீடு ஆகியவற்றுக்கு வட்டார நாணயங்களைப் பயன்படுத்துவதால் உலகச் சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களால் விளையும் தாக்கத்தைத் தவிர்க்கலாம் என்றார்.

நீடித்த நிலைத்தன்மை மிக்க நிதி, புதுப்பிக்கக்கூடிய எரிபொருளுக்கு மாறுதல், கிழக்கு கலிமந்தானில் இந்தோனீசியாவின் புதிய தலைநகரான நுசாந்தராவின் நிர்மாணப் பணிகள் போன்றவற்றில் சிங்கப்பூரின் ஆதரவு கிட்டும் என்று இந்தோனீசியா நம்புவதாகவும் டாக்டர் ஸ்ரீ முல்யானி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்