வாஷிங்டன்: அதிவேகமாக மாறிவரும் உலகில் சவால்கள் மிகுந்துள்ள வேளையில், ஆசியானுக்கு வலுவான தலைமைத்துவமும் தொலைநோக்கும் தேவை என்று இந்தோனீசியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மார்ட்டி நாட்டாலெகாவா எச்சரித்துள்ளார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் ‘ஏஷியன் இன்சைடர்’ வலையொலியில் அவர் இக்கருத்தைத் தெரிவித்தார். அரசதந்திரமும் ஆட்சித்திறனும் நலிவடைந்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.
கலந்துரையாடல்கள், சமரசப் பேச்சுகள் ஆகியவற்றின் சார்பாகப் பேசுவோர், சமாதானக் கொள்கையை கைக்கொள்கிறார்கள் அல்லது குறிப்பிட்ட சில ஏற்றுக்கொள்ளமுடியாத செயல்களை நியாயப்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாக டாக்டர் நாட்டாலெகாவா கூறினார்.
கடந்த காலத்தில் பதற்றமும் வெறுப்பும் மிகுந்த நாடுகள் இடையே ஆசியான் உத்திபூர்வ நம்பிக்கையை வெற்றிகரமாக ஏற்படுத்தியுள்ளதாக அவர் சொன்னார். மக்கள் நல்வாழ்வை மேம்படுத்துவதிலும் அது வெற்றிகண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
“இருப்பினும், இந்த நன்மைகள் தொடர வேண்டும்; நாம் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது,” என்று டாக்டர் நாட்டாலெகாவா வலியுறுத்தினார்.
ஆசியான் மெத்தனமாக இருந்துவிட்டால், அது ஒதுக்கித் தள்ளப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக அவர் எச்சரித்தார்.
இந்நிலையில், மியன்மாரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மிகக் கடுமையான ஒன்று என்றார் அவர்.
2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு மேற்கொள்ளப்பட்டதிலிருந்து அங்கு உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
மியன்மார் விவகாரத்தைப் பற்றி சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளும் வெளிப்படையாகப் பேசக்கூடிய ஒரு சூழல் இருக்கவேண்டும் என்ற டாக்டர் மார்ட்டி, தற்போது அத்தகைய ஒரு செயல்முறை இல்லை என்றும் சுட்டினார்.
ஆசியானுக்குத் தற்போது தலைமைதாங்குவதால், அவ்வட்டாரத்தின் ஒற்றுமையையும் இந்தோனீசியா கட்டிக்காக்கவேண்டும் என்று டாக்டர் நாட்டாலெகாவா வலியுறுத்தினார்.