ஒருதரப்பு மட்டும் விதிக்கும் வரிகளை ஆசியான் நிராகரிக்கிறது: அன்வார்

ஒருதரப்பு மட்டும் விதிக்கும் வரிகளை ஆசியான் நிராகரிக்கிறது: அன்வார்

1 mins read
2d538e83-3608-4b58-9e7f-85d7c705eedd
பேங்காக்கில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: ஒருதரப்பு மட்டும் விதிக்கும் எந்தவிதமான வரிகளையும் ஆசியான் நிராகரிப்பதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் மறுவுறுதிப்படுத்தியுள்ளார். அத்தகைய செயல்கள் பலதரப்பு முறையிலிருந்து முரண்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பணிநிமித்தமாக தாய்லாந்துக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட திரு அன்வார், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரிவிதிப்பு விவகாரம் குறித்து தாய்லாந்துப் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவாத்துடன் கலந்தாலோசித்ததாகக் கூறினார்.

அமெரிக்காவின் வரிவிதிப்பு தொடர்பில் நடந்துவரும் பேச்சுவார்த்தைக்குத் தயார்செய்யும் நோக்கிலேயே ஆசியான் வர்த்தக அமைச்சர்கள், நிதி அமைச்சர்கள் சந்திப்புகள் நடத்தப்பட்டதை திரு அன்வார் சுட்டினார்.

தாய்லாந்துப் பயணத்தின் முடிவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) பேசிய அவர், “தடையற்ற வர்த்தகத்தையும் பலதரப்பு முறையையும் ஆசியான் ஆதரிக்கிறது. ஒருதரப்பால் மட்டும் விதிக்கப்படும் வரிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டை நாங்கள் கொண்டுள்ளோம்,” என்றார்.

அமெரிக்க வரிவிதிப்பு தொடர்பில் ஆசியானின் ஒருமித்த இணக்கத்தை இந்த நிலைப்பாடு வெளிப்படுத்துவதாக திரு அன்வார் வலியுறுத்தினார்.

இதற்கிடையே, ஆசியானுக்கும் ஜப்பான், நியூசிலாந்து உள்ளிட்ட வட்டாரப் பங்காளித்துவ நாடுகளுக்கும் இடையே கருத்துகள் ஒத்திருப்பது மனநிறைவு தருவதாக திரு அன்வார் சொன்னார்.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான தேவை குறித்து ஜப்பானிய, நியூசிலாந்துப் பிரதமர்களும் ஆசியான் தலைவர்களும் ஒருமனதாக இணக்கம் தெரிவித்திருப்பது தமக்கு மகிழ்ச்சி தருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்