தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உச்சநிலை மாநாட்டில் கோலாலம்பூர் பிரகடனத்தை ஆசியான் ஏற்க உள்ளது: ஃபாமி

2 mins read
a9f914e8-afa4-438d-8e24-2d4699285ffc
மலேசியத் தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபட்சில். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டுக்குப் பிறகு, சமூக ஊடகம் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சிகளை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ஆசியான் நாடுகள் ஒருங்கிணைக்கும் என்று மலேசியாவின் தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

இந்த உச்சநிலை மாநாடு அக்டோபர் மாதம் 26ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதி வரை நடைபெறும்.

திட்ட ஒருங்கிணைப்பு கோலாலம்பூர் பிரகடனம் வாயிலாக நடைமுறைப்படுத்தப்படும்.

சமூக ஊடகத்தைக் கூடுதல் பொறுப்புடன் பயன்படுத்துவது குறித்து முக்கியத்துவம் வழங்கப்படும்.

உச்சநிலை மாநாட்டில் ஏற்கப்படும் முக்கிய அணுகுமுறைகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

“கடந்த மே மாதம் புருணைத் தலைநகர் பண்டார் ஸ்ரீ பகவானில் தகவல் தொடர்பாகப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்களிடையே நடைபெற்ற கலந்துரையாடலின் விளைவாக இந்தக் கோலாலம்பூர் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

“சமூக ஊடகம் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள கூட்டு உத்திமுறையும் கூட்டு நடவடிக்கைகளும் அவசியம் என்று கலந்துரையாடலின்போது இணக்கம் காணப்பட்டது,” என்று மலேசியாவில் உள்ள ஸ்ரீ அங்கசா மண்டபம், அங்கசாபுரி கோத்தா மீடியாவில் நடைபெற்ற ஆசியான் நட்புறவு கலைநிகழ்ச்சி 2025க்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் ஃபாமி கூறினார்.

பரப்பளவு, பங்களிப்பு ஆகியவற்றில் ஆசியான் நாடுகள் வித்தியாசப்படும்போதிலும் இணையம் வழி பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை அனைத்து நாடுகளும் எதிர்நோக்குவதை அவர் சுட்டினார்.

இணையம் மூலம் மோசடி, சூதாட்டம் போன்றவற்றை அவர் உதாரணம் காட்டினார்.

உச்சநிலை மாநாடு தொடங்குவதற்கு முன்பு அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்து முடிக்கப்படும் என்று அமைச்சர் ஃபாமி உறுதி அளித்தார்.

அக்டோபர் 22ஆம் தேதியன்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்துக்கு நேரில் சென்று உச்சநிலை மாநாட்டுக்கான ஏற்பாடுகள் சுமுகமான முறையில் நடைபெறுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய இருப்பதாக அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்