செப்பாங்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்கான ‘கியூஆர்’ குடிநுழைவு குறியீட்டு முறையை ஆசியான் நாடுகளைச் சேர்ந்த விமானப் பயணிகள் அடுத்த ஆண்டு முதல் பயன்படுத்தலாம் என மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் சனிக்கிழமையன்று கூறினார்.
‘மலேசியாவுக்கு வாருங்கள்- 2026’ என்னும் பிரசாரத்திற்கு முன்னதாக, மலேசியாவுக்கு வருகை தரும் பயணிகளில் பெரும்பாலானோருக்கும் அந்நாட்டில் உள்ள மற்ற முக்கிய அனைத்துலக விமான நிலையங்களுக்கும் இந்த நடைமுறை விரிவுபடுத்தப்படும் என திரு சைஃபுதீன் நசுத்தியோன் தெரிவித்தார்.
வருகைக்குத் தற்போது பயன்பாட்டில் இருக்கும் வழித்தடங்களையும் புறப்படுவதற்கு அண்மையில் தொடங்கப்பட்ட புதிய வழித்தடங்களையும் ஆசியான் சுற்றுப்பயணிகள் பயன்படுத்தலாம் என அவர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சொன்னார்.
ஆசியான் கூட்டமைப்பின் தலைவராக கிட்டத்தட்ட 400 கூட்டங்களை மலேசியா இந்த ஆண்டு நடத்தவுள்ளது. ஆசியான் பிரதிநிதிகளுக்குத் தடையற்ற பயணத்தை வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் மலேசியா ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“குறைந்த அபாயம் எனக் குறிப்பிடப்பட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்குப் புறப்படுவதற்கான ‘கியூஆர்’ குடிநுழைவு குறியீட்டு முறையைப் பயன்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும். நாம் முதலில் ஆசியான் நாடுகள்மீது கவனம் செலுத்துவோம்.
“பெரும்பாலான சுற்றுப்பயணிகள் சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து வருகிறார்கள் என்று எங்களுக்குத் தெரியும். அவர்களுக்கு அடுத்தபடியாக, ஆசியான் வட்டாரத்திற்கு வெளியே சீனா, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து சுற்றுப்பயணிகள் வருகின்றனர்,” என்றார் திரு சைஃபுதீன் நசுத்தியோன்.

