மியன்மார் ராணுவம் நடத்திய தேர்தலை அங்கீகரிக்கப் போவதில்லை: ஆசியான்

மியன்மார் ராணுவம் நடத்திய தேர்தலை அங்கீகரிக்கப் போவதில்லை: ஆசியான்

2 mins read
361177e9-008f-47d6-913f-7ea1bd95b9e0
ஐசீஸ்-யூசோஃப் இ‌ஷாக் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) உரையாற்றிய பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சர் தெரேசா லஸாரோ (வலம்). அவருடன் நிலையத்தின் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு சோய் ‌ஷிங் குவோக். - படம்: ஐசீஸ்-யூசோஃப் இ‌ஷாக் நிலையம்

மணிலா: மியன்மாரில் ராணுவம் அண்மையில் நடத்திய தேர்தலை ஆசியான் அங்கீகரிக்காது என்று பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சர் தெரேசா லஸாரோ கூறியிருக்கிறார்.

அங்கு வன்முறை ஓயாதவரை அந்த நிலை தொடரும் என்றார் அவர். மியன்மார் விவகாரத்தில், ஆசியான் அதன் ஐந்து அம்சத் திட்டத்தில் உறுதியாய் இருப்பதாகத் திருவாட்டி லஸாரோ வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) சொன்னார்.

“மியன்மாரைப் பொறுத்தவரை ஆசியானின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. ஐந்து அம்சத் திட்டமே அதற்குத் தொடர்ந்து அடித்தளமாகத் திகழும்,” என்று அவர் கூறினார்.

வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும்; அனைத்துக் கட்சிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற வேண்டும்; மனிதநேய உதவி நல்கப்பட வேண்டும்; சிறப்புத் தூதர் நியமிக்கப்பட வேண்டும்; அவர் அனைத்துக் கட்சியினரையும் சந்தித்துப் பேச வேண்டும் ஆகியவையே அந்த ஐந்து அம்சங்கள். ஆனால் மியன்மார் ராணுவம் அவற்றை நிராகரித்துவிட்டது.

பிலிப்பீன்ஸ், ஆசியானின் தலைமைத்துவத்தை இவ்வாண்டு ஏற்றது குறித்து, சிங்கப்பூரில் உள்ள ஐசீஸ்-யூசோஃப் இ‌ஷாக் நிலையத்தில் திருவாட்டி லஸாரோ உரையாற்றினார்.

மியன்மார் குறித்த நிலைப்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டால், ஆசியான் அதன் முடிவை மறுபரிசீலனை செய்யுமா என்று அவரிடம் கேட்கப்பட்டது.

“வன்முறை முடிவுக்கு வருவதே அடிப்படை அம்சம். ஆசியான் அதனைத்தான் உற்று நோக்கும்,” என்று அதற்கு அவர் பதிலளித்தார். சென்ற ஆண்டு (2025) டிசம்பர் வரை அங்கு வெடிகுண்டுச் சம்பவங்கள் நடந்ததை அமைச்சர் லஸாரோ சுட்டினார்.

மியன்மாரில் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ராணுவம் அப்போதைய அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பிறகு பெரும்பாலான பகுதிகளில் சண்டை தொடர்கிறது. இதற்கு இடையிலும் ராணுவம் தேர்தலை மூன்று கட்டங்களாக அண்மையில் நடத்தி முடித்தது.

தென்சீனக் கடல் விவகாரத்தில் நடத்தைக் கோட்பாடு குறித்து ஆசியான் பெய்ஜிங்குடன் பேச்சு நடத்துவதும் நீண்டகாலமாகத் தாமதமடைந்து வருகிறது. அதுபற்றியும் திருவாட்டி லஸாரோவிடம் வினவப்பட்டது. பேச்சை விரைவில் நடத்துவதற்கு ஆசியான் முயல்வதாக அவர் பதில் தந்தார்.

பணிக்குழு ஒன்று மாதந்தோறும் நேரடியாகச் சந்தித்து நடத்தைக் கோட்பாடு குறித்து விவாதிக்கும் என்றார் பிலிப்பீன்ஸ் அமைச்சர். இவ்வாண்டுக்குள் அதற்கான ஆவணத்தைத் தயாரித்து முடிப்பது இலக்கு என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்