மியன்மார் தேர்தலை ஆசியான் அங்கீகரிக்காது: மலேசியா

1 mins read
f2d9604d-c84d-4c65-a038-bbf02d28216c
மலேசியாவின் வெளியுறவு அமைச்சர் முகம்மது ஹசன். - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: 11 உறுப்பினர்களைக் கொண்ட ஆசியான் கூட்டமைப்பு மியன்மாரில் நடக்கும் தேர்தலை அங்கீகரிக்காது என்று மலேசியா தெரிவித்துள்ளது.

அதேபோல் மியன்மாரில் நடக்கும் தேர்தலுக்கு ஆசியான் அமைப்பு அதன் அதிகாரிகளையோ கவனிப்பார்களையே அனுப்பாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் வெளியுறவு அமைச்சர் முகம்மது ஹசன் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இதைக் கூறினார்.

மியன்மாரில் 2025 டிசம்பர் முதல் கட்டங்கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட்டுவருகிறது. மியன்மார் ராணுவத்தின் தலைமையில் அது நடக்கிறது.

ஐக்கிய நாட்டு நிறுவனம், வலதுசாரி அமைப்புகள், மேற்கத்திய நாடுகள் எனப் பல்வேறு அமைப்புகள் மியன்மார் தேர்தலைக் குறைகூறிவருகின்றன. ராணுவ ஆட்சியைத் தொடர நடத்தப்படும் நாடகம்தான் இந்தத் தேர்தல் என அவை சாடியுள்ளன. இருப்பினும், இதனை மியன்மார் ராணுவம் மறுத்து வருகிறது.

ஜனவரி மாதம் நடந்த இரண்டாம் கட்டத் தேர்தலில் குறைவான அளவிலேயே பொதுமக்கள் வாக்களித்தனர்.

முதற்கட்டத் தேர்தலில் ராணுவத்தின் துணையுடன் போட்டியிட்ட யுஎஸ்டிபி கட்சி கீழ் அவையில் உள்ள 88 விழுக்காட்டு இடங்களைக் கைப்பற்றியது.

அமைதிக்கான நோபெல் பரிசு வென்ற ஆங் சான் சூச்சி வழிநடத்திய அரசாங்கத்தின் ஆட்சியை மியன்மார் ராணுவம் 2021ஆம் ஆண்டு கவிழ்த்ததை அடுத்து மியன்மாரில் வன்முறை வெடித்தது.

குறிப்புச் சொற்கள்