தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க வரிகளுக்குப் பதில் வரி விதிக்கப்போவதில்லை: ஆசியான் பொருளியல் அமைச்சர்கள்

2 mins read
சவால் நிறைந்த இச்சூழலை ஆசியான் நாடுகளுடன் ஒன்றுபட்டுக் கடந்துசெல்ல சிங்கப்பூர் உறுதியாக இருக்கிறது: துணைப் பிரதமர் கான்
32b2dc6f-e45a-48e3-a4db-81c4eb17fbe0
அமெரிக்காவுடன் வெளிப்படையான, ஆக்ககரமான கலந்துரையாடலை நிகழ்த்துவதற்கான கடப்பாட்டை ஆசியான் வலியுறுத்தியுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: அமெரிக்கா அண்மையில் விதித்துள்ள வரிகளுக்குப் பதிலடியாக அதன்மீது வரி விதிக்கப்போவதில்லை என்று ஆசியான் நாடுகளின் பொருளியல் அமைச்சர்கள் வியாழக்கிழமை (ஏப்ரல் 10) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற சந்திப்பில், வர்த்தகம் தொடர்பான கவலைகள் குறித்து அமெரிக்காவுடன் வெளிப்படையான, ஆக்ககரமான கலந்துரையாடலை நிகழ்த்துவதற்கான கடப்பாட்டை ஆசியான் வலியுறுத்தியுள்ளது. 

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஏப்ரல் 2ஆம் தேதி அறிவித்த இறக்குமதி வரிகளைத் தொடர்ந்து நிச்சயமற்ற சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் ஆசியான் அமைச்சர்களின் கூட்டறிக்கை வெளிவந்துள்ளது.

“சமநிலையான, நீடித்த உறவை உறுதிசெய்வதற்கு, வெளிப்படையான கருத்துப் பரிமாற்றமும் ஒருங்கிணைப்பும் மிக முக்கியம். அந்த வகையில், அமெரிக்கா விதித்துள்ள வரிகளுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக அதன் இறக்குமதிகள் மீது எந்த விதமான வரியையும் விதிக்கப்போவதில்லை என்பதில் ஆசியான் உறுதியாக இருக்கிறது,” என்று அந்தக் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசியான் பொருளியல் அமைச்சர்களின் சிறப்புச் சந்திப்புக்கு, மலேசியாவின் முதலீடு, வர்த்தக, தொழில் அமைச்சர் தெங்கு ஸஃப்ருல் அஸிஸ் தலைமை தாங்கினார்.

சந்திப்பில், கலந்துரையாடலுக்கான முதன்மைத் தளமாக உலக வர்த்தக நிறுவனத்தைக் கொண்டிருப்பதற்கு ஆசியான் ஆதரவு தெரிவித்தது.

வர்த்தகப் பதற்றங்கள் அதிகரிப்பதைத் தடுப்பதிலும் ஒத்துழைப்பு மிக்க விதிகளின் அடிப்படையிலான தீர்வுகளை ஊக்குவிப்பதிலும் உலக வர்த்தக நிறுவனத்தின் பங்கை அது எடுத்துரைத்தது.

அமெரிக்க அதிபர் ஏப்ரல் 2ஆம் தேதி அனைத்து நாடுகளின் பொருள்களுக்கும் இறக்குமதி வரிகளை அறிவித்தார். அதன்கீழ், தென்கிழக்காசிய நாடுகளுக்கு 10 முதல் 49 விழுக்காடு வரையிலான வரி விதிக்கப்பட்டது.

இருப்பினும், ஏப்ரல் 9ஆம் தேதி நடப்புக்கு வந்த சிறிது நேரத்திலேயே அந்த வரிகள் பெரும்பாலான நாடுகளுக்கு 90 நாள்கள் நிறுத்திவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சீனாவுக்கு மட்டும் 125 விழுக்காட்டு வரி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சீனா அமெரிக்க இறக்குமதிகளுக்கு 84 விழுக்காட்டு வரி விதித்திருந்தது.

வியாழக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங், “தற்போது நடைபெறும் வர்த்தகப் போர் உலகப் பொருளியலில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் சிங்கப்பூரையும் ஆசியான் வட்டாரத்தையும் வெகுவாகப் பாதித்துள்ளது. நிச்சயமற்ற இந்தச் சூழலில் இந்தச் சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளிப்படையான, விதிமுறைகளின் அடிப்படையிலான வர்த்தக முறை மீது ஆசியான் கொண்டுள்ள அசைக்க முடியாத கடப்பாட்டுக்கான சான்று,” என்று கூறினார்.

சவால் நிறைந்த இச்சூழலை ஆசியான் நாடுகளுடன் ஒன்றுபட்டுக் கடந்துசெல்ல சிங்கப்பூர் உறுதியாக இருக்கிறது என்றார் திரு கான். வட்டாரப் பொருளியல் ஒருங்கிணைப்பை இரட்டிப்பாக்க ஆசியான் நாடுகளுடன் சிங்கப்பூர் அணுக்கமாக ஒத்துழைக்கும் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்