ஆசியானின் முடிவு சமநிலையும் நியாயமும் அற்றது: மியன்மார் குற்றச்சாட்டு

ஆசியானின் முடிவு சமநிலையும் நியாயமும் அற்றது: மியன்மார் குற்றச்சாட்டு

படம்: ராய்ட்டர்ஸ்

22 Nov 2026 - 1:41 pm

2 mins read

யங்கூன்: ராணுவ ஆதரவுடன் இயங்கும் மியன்மார் அரசாங்கம், ஆசியான் கூட்டமைப்பு அதன் மாநாடுகளில் தனது நாட்டுக்கு முழுப் பிரதிநிதித்துவத்தை வழங்காதது ‘சமநிலையும் நியாயமும் அற்ற செயல்’ என்று சனிக்கிழமை (நவம்பர் 21) குற்றஞ்சாட்டியது.

அண்மையில் பிலிப்பீன்சில் நடந்த 49வது ஆசியான் மாநாட்டில் வெளியிடப்பட்ட அந்த முடிவு, அந்நாடு மேற்கொண்டுள்ள நேர்மறை நடவடிக்கைகளை முழுமையாக கருத்தில்கொள்ளவில்லை என்று மியன்மாரின் வெளியுறவு அமைச்சு கூறியது.

மியான்மார் முழு உறுப்பினர் தகுதியை அடைவதற்குக் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஐந்து அம்சங்களை ஆசியான் கூட்டமைப்பின் தலைவர்கள் பரிந்துரைத்திருந்தனர். அவற்றில் முன்னேற்றம் காணப்பட்டால் உறுப்பினர் தகுதி பரிசீலிக்கப்படும் என்பது ஆசியானின் நிலைப்பாடாகும்.

அதன்படி, மியன்மாரில் நடக்கும் வன்முறை உடனடியாக அனைவராலும் நிறுத்தப்படுதல், அமைதி உடன்பாட்டுக்கான ஆக்கபூர்வப் பேச்சுவார்த்தை நடத்துதல், ஆசியான் தலைமைத்துவம் நியமிக்கும் சிறப்புத் தூதரின் தலைமையில் சமரசம் செய்தல், ஆசியான் மனித உரிமை மையம் வழியாக மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுதல், மியன்மாரின் அனைத்துத் தரப்பினரையும் ஆசியானின் சிறப்புத் தூதரும் பேராளர்களும் நேரடியாகச் சந்தித்தல் ஆகியன அந்த ஐந்து நிபந்தனைகள் என்று தெரிகிறது.

இதற்கிடையே, ஆசியான் கூட்டமைப்புடனான மியன்மாரின் உறவை அந்நாடு மறுபரிசீலனை செய்வதாக மியன்மார் அதிபர் மின் ஆங் லைங் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் கூறியிருந்தார்.

ஆசியான் மாநாடுகளில் மியன்மாரைக் கலந்துகொள்ளவிடாமல் தவிர்ப்பது பாரபட்சமானது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட்டது. மியன்மாரின் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படாமல், சம உரிமைகள் வழங்கப்படாமல் அதன் உறுப்பினர் தகுதி நிராகரிக்கப்படுவதாகவும் அறிக்கையில் வெளியுறவு அமைச்சு விளக்கியது.

மேலும், அந்நாட்டில் அரசியல் கைதிகள் அறவே இல்லை என்று தெரிவித்ததுடன், ராணுவ ஆட்சி தொடங்கியதிலிருந்து 126,000 பேருக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதையும் அது சுட்டியது.

ஜனநாயக ஆட்சிக் கவிழ்ப்பு நடந்ததிலிருந்து மியன்மாரில் ஆயிரக்கணக்கில் அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறி வருகிறது.

குறிப்புச் சொற்கள்