மணிலா: நீண்ட காலமாக முடங்கிக் கிடக்கும் தனது ஐம்பெரும் அமைதித் திட்டத்தின் செயலாக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில், மியன்மாரில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அளவிடுவதற்கான அளவுகோல்களை உருவாக்கவும் நீண்டகால சிறப்புத் தூதரை நியமிப்பது குறித்து விவாதிக்கவும் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 21) ஒப்புக்கொண்டனர்.
மணிலாவில் நடைபெற்ற 59வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் இடையே, மியன்மார் குறித்து நடைபெற்ற விரிவான முறைசாரா ஆலோசனையின்போது விவாதிக்கப்பட்ட இந்த முன்மொழிவுகள், நவம்பர் மாதம் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் ஆசியான் நாட்டுத் தலைவர்களிடம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு, மூத்த அதிகாரிகளால் செம்மைப்படுத்தப்படும் என்று பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சர் தெரசா லசாரோ தெரிவித்தார்.
2021ல் ராணுவம் ஆட்சியைப் பிடித்த பிறகு முதல் முறையாக, ஏறக்குறைய அனைத்து ஆசியான் வெளியுறவு அமைச்சர்களையும் மியன்மாரின் வெளியுறவு அமைச்சரையும் ஒன்றிணைத்த, ஜூலை 12ஆம் தேதி பேங்காக்கில் நடைபெற்ற முறைசாரா கூட்டத்தைத் தொடர்ந்து இந்த விவாதங்கள் நடைபெற்றன.
மணிலாவில், அமைச்சர்கள் பேங்காக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை மீண்டும் ஆய்வு செய்தனர். மியன்மாரில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான ஓர் ஆசியான் கட்டமைப்பை உருவாக்குவது மற்றும் சிறப்புத் தூதரின் பதவியை ஆண்டுதோறும் சுழற்சி முறையில் வழங்குவதற்குப் பதிலாக, அவரை நீண்ட காலத்திற்கு நியமிப்பது குறித்து ஆராய்வது ஆகியவை இதில் அடங்கும்.
“நவம்பரில் நடைபெறும் ஆசியான் தலைவர்கள் கூட்டத்திற்கு இது ஓர் உள்ளீடாக அமையும் என்பதால், மூத்த அதிகாரிகள் இதற்கு விரிவான விளக்கம் அளித்து கவனமாக விவாதிக்க வேண்டும் என்று நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்,” என்று பிலிப்பீன்சின் மியன்மார் சிறப்புத் தூதராகவும் பணியாற்றும் திருவாட்டி லசாரோ செய்தியாளர்களிடம் கூறினார்.
தூதரின் பணிகளுக்கு ஆதரவளிப்பதற்காக ஆசியான் செயலகத்திற்குள் ஒரு பிரிவை நிறுவ புருணை முன்மொழிந்துள்ளதாகவும், இருப்பினும் நிதி மற்றும் செயல்பாட்டு ஏற்பாடுகள் போன்ற சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் போட்டி, தென் சீனக் கடல் பதற்றங்கள், மியன்மார் முதல் மத்திய கிழக்கு வரை பரவியுள்ள மோதல்கள் ஆகியவற்றின் பின்னணியில், அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட முக்கிய உரையாடல் பங்காளிகளுடன் இந்த வாரம் நடைபெறவிருக்கும் கூட்டங்களுக்கு முன்னதாக, ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் மணிலாவில் கூடியிருந்த வேளையில் இந்த விவாதங்கள் நடைபெற்றன.

