எண்ணெய் விலை உயர்வு; ஆசியப் பங்குகள் தடுமாற்றம்

எண்ணெய் விலை உயர்வு; ஆசியப் பங்குகள் தடுமாற்றம்

2 mins read
5cbf0e9b-7489-4296-ba86-f5ce7e82de9c
அமெரிக்க ராணுவம் ஈரான்மீது தொடர்ச்சியாக ஒன்பதாவது நாளாகத் தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், ‘பிரென்ட்’ கச்சா எண்ணெய் விலை ஒரு மாதத்திற்கும் மேலான காலத்தில் முதன்முறையாக பீப்பாய் ஒன்றுக்கு 90 அமெரிக்க டாலருக்குமேல் உயர்ந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: வளைகுடாப் பகுதியில் தீவிரமடைந்துவரும் பூசலால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, பணவீக்கம் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ள சூழலில், திங்கட்கிழமை (ஜூலை 20) ஆசியப் பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்தன.

அமெரிக்க ராணுவம் ஈரான்மீது தொடர்ந்து ஒன்பதாவது நாளாகத் தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், ‘பிரென்ட்’ கச்சா எண்ணெய் விலை ஒரு மாதத்திற்கும் மேலான காலத்தில் முதன்முறையாக பீப்பாய் ஒன்றுக்கு 90 அமெரிக்க டாலருக்குமேல் உயர்ந்தது.

ஈரான் அவ்வட்டாரம் முழுவதிலும் உள்ள இலக்குகள்மீது பதில் தாக்குதல் நடத்தியது. ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) ஹோர்முஸ் நீரிணை வழியே சில கப்பல்கள் மட்டுமே சென்றதாகவும் அவற்றில் ஒரு கப்பல் தீப்பற்றி எரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

“ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டு, போர் தீவிரமடைந்தால், விநியோகப் பாதிப்புக்கு ஏற்பத் தேவையைக் குறைக்கக் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்குக் கிட்டத்தட்ட 150 அமெரிக்க டாலர்வரை உயரக்கூடிய சாத்தியம் அதிக அளவில் உள்ளது,” என்று ‘ஏஎம்பி’ நிதி மேலாண்மை நிறுவனத்தின் முதலீட்டு உத்திப் பிரிவுத் தலைவர் ஷேன் ஓலிவர் தெரிவித்தார்.

பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 2.6 விழுக்காடு உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 90.40 அமெரிக்க டாலராகவும், அமெரிக்கக் கச்சா எண்ணெய் விலை 2.3 விழுக்காடு கூடி, 84.39 அமெரிக்க டாலராகவும் அதிகரித்தன.

கடந்த வாரம் அமெரிக்கப் பயனீட்டாளர் விலைக் குறியீடு, எதிர்பார்க்கப்பட்டதைவிட குறைவாகப் பதிவானபோதிலும், எரிபொருள் விலையின் திடீர் உயர்வு பணவீக்கம் குறித்த கவலையை மீண்டும் எழுப்பியுள்ளது.

“மத்திய வங்கி விகிதத்தை உயர்த்தும் நடவடிக்கை 2027ஆம் ஆண்டில் படிப்படியாகத்தான் தொடங்கும் என்பது எங்களது கணிப்பாகும். ஆனால், எதிர்பார்க்கப்பட்டதைவிட விரைவாகவே விகிதம் உயர்த்தப்படுவதற்கான சாத்தியம் தற்போது அதிகரித்து வருகிறது,” என்று ஜேபிமோர்கனின் தலைமைப் பொருளியல் நிபுணர் புரூஸ் காஸ்மேன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாஸ்டாக் ஃபியூச்சர்ஸ் 0.1 விழுக்காடு அதிகரித்தது. தொழில்நுட்பப் பங்குகளில் ஏற்பட்ட பெரும் சரிவால் கடந்த வாரம் 6.4 விழுக்காடு குறைந்த ஜப்பானின் நிக்கேய் பங்குச் சந்தை, விடுமுறை காரணமாக மூடப்பட்டிருந்தது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

ஜப்பானைத் தவிர்த்த ஆசிய பசிபிக் பங்குகளுக்கான ‘எம்எஸ்சிஐ’ (MSCI) குறியீடு 0.3 விழுக்காடு சரிந்தது. அதே வேளையில், சீன ‘ப்ளூ சிப்’ (blue chip) பங்குகள் 1.4 விழுக்காடு உயர்ந்தன. தென் கொரியாவின் சில்லுத் தயாரிப்பு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் பங்குச் சந்தை மேலும் 4.2 விழுக்காடு இறக்கம் கண்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்