பயணக் கட்டணத்தை உயர்த்திய ஆசிய விமான நிறுவனங்கள்

பயணக் கட்டணத்தை உயர்த்திய ஆசிய விமான நிறுவனங்கள்

2 mins read
d6af1343-90c1-4470-9920-96a30e348dad
இந்திய விமான நிறுவனங்கள் நீண்டதொலைவு விமானங்களுக்கான பயணக் கட்டணங்களை 15 விழுக்காடுவரை உயர்த்திவிட்டன. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

ஹாங்காங்: ஆசிய விமான நிறுவனங்கள் பயணக் கட்டணத்தை உயர்த்தி வருகின்றன.

சில விமானச் சேவைகளை நிறுத்திவைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவை சிந்தித்து வருகின்றன.

மத்திய கிழக்கில் நீடிக்கும் சண்டையால் எரிபொருள் விலை உயர்ந்ததும் அதற்குப் பற்றாக்குறை ஏற்பட்டதுமே இதற்குக் காரணம்.

இந்திய விமான நிறுவனங்கள் நீண்டதொலைவு விமானங்களுக்கான பயணக் கட்டணங்களை 15 விழுக்காடுவரை உயர்த்திவிட்டன. கட்டணத்தை மேலும் அதிகரிக்கவும் அவை திட்டமிட்டுள்ளதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

விமான எரிபொருளுக்கு இறக்குமதியையே பெரிதும் நம்பியிருப்பதால் பயணக் கட்டணம் 70 விழுக்காடுவரை உயர்த்தப்படலாம் என்று வியட்னாம் அரசாங்க ஊடகம் எச்சரித்துள்ளது.

விமானப் பயணக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதாகக் கூறிய ஏர் நியூசிலாந்து, எரிபொருள் விலை உயர்வு தொடர்ந்தால் பயணக் கட்டணத்தை மேலும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய அல்லது அமெரிக்க விமான நிறுவனங்களைப் போல, ஆசிய விமான நிறுவனங்கள் அதிக எண்ணெய் விலை உயர்வுக்கு எதிரான இழப்புக்காப்பு வணிக நடைமுறைகளைக் கொண்டிருக்கவில்லை. அதனால், விமான எரிபொருள் விலை திடீரென உயரும்போது அவை பாதிப்பிற்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.

இதன் காரணமாக, தென்கிழக்காசியாவின் மலிவுக் கட்டண விமானச் சேவை நிறுவனங்கள், விமான எரிபொருள் விலை கட்டுப்படியாகாத நிலையை எட்டினால் அல்லது அதன் விநியோகம் தடைபட்டால், விமானச் சேவைகளை நிறுத்திவைப்பது குறித்த சாத்தியக்கூறுகளை ஆராயத் தொடங்கியுள்ளன என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“எல்லா இடங்களிலும் ஒருவித பதற்றமான சூழல் உருவாகியுள்ளது,” என்று ‘ஸ்பார்ட்டா கமாடிட்டீஸ்’ நிறுவனத்தின் மூத்த எண்ணெய்ச் சந்தைப் பகுப்பாய்வாளர் ஜூன் கோ கூறியுள்ளார்.

“வலுவற்ற இழப்புக்காப்பு வணிக நடைமுறைகளைக் கொண்டுள்ள ஆசிய விமான நிறுவனங்கள், இப்போதைய விலையைவிட குறைவான விலையில் ஏற்கெனவே பயணச்சீட்டுகளை விற்றிருந்தால், தற்போதைய எரிபொருள் விலையேற்றத்தால் அவை பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்,” என்று அவர் சொன்னார்.

இதே நிலை இன்னும் மூன்று மாதங்களுக்குமேல் நீடித்தால், மலிவுக் கட்டணச் சேவை வழங்கும் சில விமான நிறுவனங்கள் முடங்கும் நிலை ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகெங்கும் உள்ள விமான நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான விமானங்களைத் தரையிறக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம் என்று டாயிஷ் வங்கியைச் சேர்ந்த பகுப்பாய்வாளர் மைக்கல் லினன்பர்க் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஈரான் மீதான தாக்குதல் விரைவில் முடிவிற்கு வரும் என அறிவித்ததை அடுத்து, கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியது. இது, விமானச் சேவை நிறுவனங்களிடம் சற்று நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்