புதுடெல்லி: ஈரான் எண்ணெய் விற்பனை செய்ய விதிக்கப்பட்டத் தடையை அமெரிக்கா தற்காலிகமாக விலக்கியுள்ளது.
அதனைப் பயன்படுத்திக்கொண்டு இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஈரானிடம் எண்ணெய் வாங்கத் தயாராகி வருகின்றன. இந்தியாவைப் போல பல ஆசிய நாடுகளும் ஈரானிடம் எண்ணெய் வாங்க பரிசீலித்து வருகின்றன என்று வர்த்தகர்கள் சனிக்கிழமை (மார்ச் 21) தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானில் நடத்திவரும் போர் உலக அளவில் எண்ணெய் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள், அவ்வாறு ஈரானிடம் எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்காவின் விதிமுறைகள் குறித்தும் இந்திய அரசாங்க வழிகாட்டுதலுக்கும் காத்திருக்கின்றன.
ஆசிய நிறுவனங்களை விட இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சிறிய அளவில்தான் எண்ணெய் இருப்புகளைக் கொண்டுள்ளன. ஈரான் மீதான தற்காலிகத் தடை நீக்கம் அமலுக்கு வந்ததும் அவை ரஷ்யாவிடமும் எண்ணெய் வாங்க முன்பதிவு செய்துள்ளன.
ஏற்கெனவே ஈரானிடம் வாங்கப்பட்டு பயணம் செய்யமுடியாமல் கடலில் சிக்கித் தவிக்கும் எண்ணெய் கப்பல்களுக்கு 30 நாள்கள் விற்பனைத் தடை நீக்கப்பட்டும் என்று வெள்ளிக்கிழமை (மார்ச் 20) அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெஸன்ட் அறிவித்தார்.
மார்ச் 20ஆம் தேதிக்குள்ளாக எண்ணெய் நிரப்பப்பட்ட, ஏற்கெனவே தடை செய்யப்பட்ட கப்பல்கள் உட்பட்ட எல்லாவிதமான எண்ணெய்க் கப்பலுக்கும் இந்த விலக்கு பொருந்தும்.
அந்த எண்ணெய் ஏப்ரல் 19ஆம் தேதிக்குள்ளாக விநியோகம் செய்யப்படவேண்டும் என்று அமெரிக்க வெளிநாட்டுச் சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் வழிமுறைகளை வகுத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
போர் தொடங்கியதிலிருந்து ஈரான் எண்ணெய்க்கான தடைக்கு தற்போது மூன்றாவது முறையாக தற்காலிக விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏறத்தாழ 170 மில்லியன் பீப்பாய் அளவு ஈரானிய கச்சா எண்ணெய் மத்திய கிழக்கு வளைகுடாவில் பல கப்பல்களில் கடலில் தேங்கி நிற்கிறது என்று சந்தைத் தரவுகள் காட்டுகின்றன.
ஆசியாவின் மொத்த எண்ணெய்யில் 60 விழுக்காடு மத்திய கிழக்கில் இருந்துதான் பெறப்படுகிறது. ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் ஆசிய நாடுகளைப் பெரிதும் பாதித்துள்ளது.
ஈரான்மீது கடந்த 2018ஆம் ஆண்டு அமெரிக்கா விதித்த எண்ணெய் விற்பனைத் தடைக்குப் பிறகு, அந்நாட்டின் முக்கிய வாடிக்கையாளராக அதிக அளவில் எண்ணெய்யை சீனா வாங்கி வந்தது. அதோடு ஈரானிடம் எண்ணெய் வாங்கிய நிறுவனங்கள் மூன்றாம் தரகராய் மற்ற நாடுகளுக்கு அதனை விற்பனை செய்து வந்தன.

