ஆசிய விளையாட்டுகள்: பங்கேற்பாளர் வசதிகளுக்கு ஜப்பான் பெருமுயற்சி

ஆசிய விளையாட்டுகள்: பங்கேற்பாளர் வசதிகளுக்கு ஜப்பான் பெருமுயற்சி

2 mins read
fa15184b-2c3a-4357-a17b-4b44b695693f
ஜப்பானின் நகோயா நகரில் ஆகஸ்ட் 22ல் ஆசிய விளையாட்டுகளுக்கான அதிகாரபூர்வ சுடர் ஏற்றிவைக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

தோக்கியோ: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இவ்வாண்டு ஜப்பானின் நகோயா நகரிலும் ஐச்சி வட்டாரத்திலும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை 16 நாள்கள் நடைபெறவுள்ளது.

இருபதாம் முறையாக நடக்கும் இப்போட்டித் தொடரில் பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை வழக்கத்தைவிட பன்மடங்கு அதிகரித்திருப்பதாக அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது.

அதனால் பங்கேற்கும் நாடுகளின் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கான பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாக ஜப்பானின் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் 15,000 விளையாட்டாளர்களும் அவர்களின் அதிகாரிகளும் போட்டிக்கு வருவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆசிய ஒலிம்பிக்ஸ் மன்றம் (ஓசிஏ) கடந்த வாரம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் பங்கேற்பாளர் மொத்த எண்ணிக்கை 17,000 எனக் குறிப்பிட்டிருந்தது. அதில் 11,000 போட்டியாளர்களும் 6,000 அதிகாரிகளும் உள்ளடங்குவர்.

அத்தனை அளவிலான மக்களும் தனிப்பட்ட ஒரே இடத்தில் தங்கும் ஏற்பாடுகளை அமைக்கும் வசதி ஜப்பானிடம் இல்லை. எனவே சுற்றுலா சொகுசுக் கப்பல்கள், மரத்திலான தற்காலிக மனைகள், இதர தங்குவிடுதிகள் போன்றவற்றை ஏற்பாட்டாளர்கள் நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே, ஏற்பாட்டாளர்கள் ஓசிஏ அமைப்பை அதிகரித்துவரும் வருகையாளர் எண்ணிக்கையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளதாக கியோடோ செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஓசிஏ அமைப்புடன் நடந்துவரும் பேச்சுவார்த்தைகள் குறித்து எவ்வித கருத்தையும் வெளியிட விருப்பமில்லை என்று ஆசிய விளையாட்டுகளின் ஜப்பானிய ஏற்பாட்டாளர்கள் ஏஎஃப்பி ஊடகத்திடம் கூறியுள்ளனர்.

“ஓசிஏ அமைப்பு, விளையாட்டுகளின் ஏற்பாட்டாளர்கள், ஆகியோருடன் நாங்கள் பல நாடுகளில் பதிவு செய்யப்பட்ட தேசியக் குழுக்களின் விவரங்களைப் பகிர்ந்து வருகிறோம். அவர்களைத் தங்கவைப்பதற்கான வசதிகளைப் பற்றியும் பல பரிந்துரைகளை விவாதித்து வருகிறோம்,” என்று ஏற்பாட்டுக்குழுவின் பேச்சாளர் தெரிவித்தார்.

தற்காலிகத் தங்கும் வசதிகளை ஏற்பாட்டாளர்கள் செய்துவருகின்றனர். அதன்படி, இத்தாலியின் கோஸ்டா செரினா சொகுசுக் கப்பலை அவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அதில்மட்டும் டுகளை 4,000 மிதல் 5,000 விளையாட்டாளர்கள் தங்குவர். அக்கப்பலில் 571 தனியறைகள், ஏழு நீச்சல் குளங்கள், எட்டு உணவகங்கள், ஒன்பது மதுக்கூடங்கள் உள்ளன.

வழக்கமான செப்டம்பர், அக்டோபர் மாத பருவமழை இத்திட்டத்தை தடுக்காது என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் 2,000 விளையாட்டாளர்கள் நகோயாவில் உள்ள படகுத்துறையில் கட்டமைக்கப்படும் மரக்குடில்களில் தங்கவைக்கப்படுவர்.

எஞ்சியோர் அனைவரும் உள்ளூர் தங்குவிடுதிகளிலும் ஹோட்டல்களிலும் இருப்பர். நீச்சல், முக்குளித்தல், குதிரை ஏற்றம் ஆகிய போட்டிகள் நடைபெறும் தோக்கியோ நகரில் பங்கேற்போருக்கும் இந்த ஏற்பாடுகள் பொருந்தும்.

குறிப்புச் சொற்கள்
ஜப்பான்ஆசிய விளையாட்டுஒலிம்பிக்ஆசிய விளையாட்டுப் போட்டிகள்போட்டிதங்குவிடுதிதங்குமிடம்தங்கும் விடுதி