மாஸ்கோ: சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல் அசாத் தனது குடும்பத்துடன் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா, அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் அரசியல் அடைக்கலம் வழங்கியிருக்கிறது என்று ரஷ்ய அரசு அதிகாரி ஒருவர் அந்நாட்டு ஊடகங்களிடம் தெரிவித்தார். திரு அசாத் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டதாகவும் அமைதியான முறையில் ஆட்சியை ஒப்படைக்க அவர் உத்தரவிட்டார் என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சு முன்னதாகக் கூறியிருந்தது.
சிரியாவின் கிளர்ச்சிப் படையினர் ஞாயிற்றுக்கிழமையன்று (டிசம்பர் 8) எதிர்ப்பின்றி தலைநகர் டமாஸ்கசுக்குள் நுழைந்தனர். அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் நீடித்த அசாத் குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்தது.
“சிரியாவின் (முன்னாள்) அதிபர் அசாத்தும் அவரின் குடும்பத்தாரும் மாஸ்கோ வந்துவிட்டனர்,” என்று ரஷ்ய அரசு அதிகாரி ஒருவர் சொன்னதாக ரஷ்யாவின் இன்டர்ஃபேக்ஸ் (Interfax) செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. அந்நபரின் பெயர் வெளியிடப்படவில்லை.
சிரியாவில் நிலவும் நெருக்கடிக்கு அரசியல் ரீதியாகத் தீர்வுகாண ரஷ்யா விரும்புகிறது என்று அதே நபர் கூறினார் என்றும் இன்டர்ஃபேக்ஸ் குறிப்பிட்டது. ஐக்கிய நாட்டுச் சபையின் வழிகாட்டுதலில் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் அந்நபர் சொன்னார்.
திரு அசாத்தும் அவரின் குடும்பமும் மாஸ்கோ வந்ததை ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் உள்ள அனைத்துலக அமைப்புகளுக்கான ரஷ்யத் தூதர் மிக்காய்ல் உல்யானோவ்வும் டெலிகிராம் செயலியில் தெரிவித்திருந்தார். சவாலான வேளைகளில் ரஷ்யா, அதன் நண்பர்களுக்கு துரோகம் இழைக்காது என்றும் அவர் எடுத்துரைத்தார்.
சிரியாவின் எதிர்க்கட்சித் தலைவர்கள், அந்நாட்டில் உள்ள ரஷ்ய ராணுவத் தளங்கள், அரசதந்திர நிலையங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதிசெய்ய ஒப்புக்கொண்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ரஷ்யாவின் இரண்டு முக்கியமான ராணுவத் தளங்கள் சிரியாவில் உள்ளன. அவை இரண்டும் உயர் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமையன்று ரஷ்ய வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. எனினும், அவற்றுக்கு உடனடி ஆபத்து ஏதும் இல்லை என்றும் அமைச்சு கூறியது.