தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அசாத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது: சிரியா ராணுவம்

2 mins read
efb2d827-ef3f-47d6-a836-638f58d5f414
டமாஸ்கஸில் உள்ள உமையாட் சதுக்கத்தில் அரசு எதிர்ப்புப் போராளிகளுடன், மக்கள் ‘சுதந்திரம்’ என முழக்கமிட்டு கொண்டாடினர். - படம்: ஏஎஃப்பி

அமான்/பெய்ரூட்: கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸ் தலைநகருக்குள் செல்வதற்கிடையே சிரியா அதிபர் பஷார் அல் அசாத் டமாஸ்கசை விட்டு வெளியேறிவிட்டார்.

பல ஆண்டுகளாக நடந்துவந்த உள்நாட்டுப் போரில் ரஷ்யா, ஈரான் உதவியுடன் கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக அசாத் செயல்பட்டு வந்தபோதும் அப்படைகளை அவரால் வீழ்த்த முடியவில்லை.

இந்நிலையில், தமது நட்பு நாடுகளின் கவனம் வேறு போர்களின் மீது இருக்க, விறுவிறுவென மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சியாளர் தாக்குதல்களுக்கு அவரால் இறுதியில் ஈடுகொடுக்க முடியாமல் போனது.

முன்னதாக, விமானம் ஒன்றில் டமாஸ்கஸ் தலைநகரை விட்டு அசாத் வெளியேறிவிட்டதாக இரண்டு மூத்த ராணுவ அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்தனர். டமாஸ்கஸ் ‘அசாத் பிடியில் இனி இல்லை’ என்று சிரியா கிளர்ச்சியாளர்கள் பிரகடனப்படுத்தினர்.

தந்தை ஹஃபீஸ் இறந்தபின் 2000ஆம் ஆண்டு அசாத் நாட்டின் அதிபரானார். அசாத்தின் 24 ஆண்டுகால ஆட்சி ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாக சிரியாவின் தலைமை ராணுவப் பிரிவு அதன் அதிகாரிகளுக்குத் தெரிவித்தது.

அசாத்தின் தந்தை, சகோதரர் இருவரது சிலைகளும் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள நகரங்களில் கவிழ்க்கப்பட்டன. அத்துடன் விளம்பரப்பலகைகளிலும் அரசாங்க அலுவலகங்களிலும் இருந்த அசாத்தின் படங்கள் கிழிக்கப்பட்டு, மிதிக்கப்பட்டு, தீவைக்கப்பட்டு ஏன் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டும் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கிளர்ச்சியாளர்கள் தலைநகரை முற்றுகையிட்ட அதேவேளையில் ‘சிரியன் ஏர்’ விமானம் ஒன்று டமாஸ்கஸ் விமான நிலையத்தை விட்டு புறப்பட்டதாக ‘ஃபிளைட்ரேடர்’ இணையத்தளத் தகவல் காட்டியுள்ளது.

ராணுவத் துருப்புகள் தற்காப்புக்காக நிறுத்தப்படாத நிலையில் இருந்த டமாஸ்கசுக்குள் கிளர்ச்சியாளர்கள் ஊடுருவத் தொடங்கியபோது, நாட்டிலிருந்து வெளியேறிய அசாத் எங்கு சென்றார் என்பது குறித்த தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே, டமாஸ்கசின் பிரதான சதுக்கம் ஒன்றில் ஆயிரங்கணக்கானோர் கூடி, கையசைத்தவாறு ‘சுதந்திரம்’ என முழக்கமிட்டதாக அதை நேரில் கண்ட சிலர் கூறியுள்ளனர்.

“செட்னாயா சிறைச்சாலையில் நடந்துவந்த அநீதி ஒரு முடிவுக்கு வந்துவிட்டதை அறிவித்தபடி நம் நாட்டுக் கைதிகளின் சங்கிலிகளை உடைத்து, அவர்களை விடுவித்து சிரியா மக்களுடன் கொண்டாடுகிறோம்,” என்றனர் கிளர்ச்சியாளர்கள்.

டமாஸ்கஸ் நகர்ப்புற எல்லைகளில் சிரியா அரசாங்கம் ஆயிரக்கணக்கானோரைத் தடுத்துவைத்துள்ள பெரிய ராணுவ சிறைச்சாலையே செட்னாயா.

இதற்கிடையே, அடுத்தடுத்து நிகழ்ந்துவரும் சம்பவங்களால் அரேபிய நாடுகள் உறைந்து போயுள்ளன. வட்டாரத்தில் உறுதியற்ற நிலை நிலவத் தொடங்கியுள்ளதால் அவை அச்சத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்