கோலாலம்பூர்: அடுத்த மாதம் பதவி விலகும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமை ஆணையர் அஸாம் பாக்கி, தனது அரசியல் எதிர்காலம் குறித்த பேச்சுகளைப் புறக்கணித்துள்ளார். அடுத்த மாதம் தாம் பதவி விலகிய பின்னரும் உடல்ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
மே 12ஆம் தேதியுடன் பதவிக்காலம் முடிவடையும் திரு அஸாம், பதவி விலகிய பின்னரான தனது உறுதியான திட்டங்களை இன்னும் வகுக்கவில்லை என்றும், ஆனால் வழக்கமான உடற்பயிற்சியைத் தொடர எதிர்பார்ப்பதாகவும் கூறியதாக ‘தி ஸ்டார்’ ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) செய்தி வெளியிட்டுள்ளது.
சனிக்கிழமையன்று நெகிரி செம்பிலானில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். மேலும் மெதுவோட்டம், சைக்கிள் ஓட்டுதல் போன்ற செயல்பாடுகள் மூலம் தொடர்ந்து சுறுசுறுப்பாக இருப்பேன்,” என்று கூறினார்.
மேலும், தம்மை அரசியலுடன் தொடர்புபடுத்தும் யூகங்களை அவர் நிராகரித்ததோடு, தனது பணி வாழ்க்கை எப்போதுமே பொதுச் சேவையில் வேரூன்றியுள்ளது என்றும் வலியுறுத்தினார்.
“நான் ஓர் அரசு ஊழியர். மக்களுக்குச் சேவை செய்வதே எனது கடமையாக எப்போதும் இருந்து வந்துள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.
அதே நேரத்தில், எம்ஏசிசி அதிகாரிகள் ஒற்றுமையாக இருந்து, புதிய தலைமை ஆணையரிடம் பொறுப்பு மாறும் இவ்வேளையில், வரவிருக்கும் தலைமைக்கு முழு ஆதரவளிக்க வேண்டும் என்றும் திரு அஸாம் கேட்டுக்கொண்டார்.
மேலும், மார்ச் 2020ல் முதன்முதலில் பதவியேற்றதிலிருந்து பலமுறை ஒப்பந்த நீட்டிப்புகள் உட்பட, தனது பதவிக்காலம் முழுவதும் தன் மீது நம்பிக்கை வைத்திருந்த மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுக்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
எம்ஏசிசி பணியாளர்கள் தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளைக் களைந்து, இந்த அமைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்துவார்கள் என்றும் புதிய தலைமையின் கீழ் இந்த அமைப்பின் செயல்திறனும் நேர்மையும் நிலைத்திருக்கும் எனத் தாம் நம்புவதாகத் திரு அஸாம் கூறினார்.

