ஜகார்த்தா: ஊழல், நிதிசார்ந்த பிற குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சொத்துகளை மீட்கும் அரசாங்கத்தின் முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சொத்துப் பறிமுதல் மசோதாவை இந்தோனீசிய நாடாளுமன்றம் வியாழக்கிழமை (நவம்பர் 19) நிறைவேற்றியது.
கடந்த 18 ஆண்டுகளாக விவாதத்தில் இருந்து வந்த இந்தச் சட்டம், குற்றச்செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட வருவாயை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவற்றை அரசாங்கத்திற்கு அல்லது பேரளவிலான முதலீட்டு மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி வழங்க வகைசெய்வதன் மூலம் சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
குற்றவியல் தண்டனைப் தீர்ப்பு இல்லாமலேயே சொத்துகளைப் பறிமுதல் செய்யும் நடைமுறை இச்சட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இதன் மூலம், குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டு, முதலில் குற்றவியல் தண்டனையைப் பெறாமலேயே குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சொத்துகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ள முடியும்.
ஊழல் மட்டுமன்றி போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்தல், ஆட்கடத்தல், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பேரளவிலான மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை இந்தச் சட்டம் உள்ளடக்கியுள்ளது.
மேலும், மோசடி முதலீட்டுத் திட்டங்கள், சட்டவிரோதப் பங்கு வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டு, தற்போதைய சட்ட நடைமுறைகள் மூலம் தங்கள் பணத்தைத் திரும்பப் பெற முடியாமல் தவித்து வருபவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிமுறையையும் இச்சட்டம் உருவாக்கியுள்ளது.
இந்தப் புதிய கட்டமைப்பின்கீழ், குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் விற்கப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகையை அரசாங்கக் கருவூலத்துக்கு மாற்றுவதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக இழப்பீடாக வழங்க முடியும்.
தனிநபர்கள் அல்லது வணிக நிறுவனங்களைப் போதிய சட்டப் பாதுகாப்புகளின்றி இலக்கு வைக்க இந்த அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சமும் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் அரசின் அதிகார வரம்பு குறித்த கருத்து வேறுபாடுகளும் அரசியல் எதிர்ப்புகளும் நிலவியதால் இந்த மசோதா ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக முடங்கிக் கிடந்தது.
