கேப் கார்னிவல்: அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வுபெற்றுள்ளார்.
நாசா அதனைச் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) தெரிவித்தது. சென்ற ஆண்டு (2025) டிசம்பர் மாத இறுதியில் அவர் ஓய்வுபெற்றதாக அது கூறியது.
அவரும் விண்வெளி வீரர் பட்ச் வில்மோரும் 2024ஆம் ஆண்டு விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர். ஒரு வாரத்தில் மண்ணுக்குத் திரும்புவது திட்டம். ஆனால், விண்வெளிப் பயணம் ஸ்டார்லைனரின் பிரச்சினையால் ஒன்பது மாதத்திற்கும் மேல் நீடித்தது. இறுதியில் ஸ்பேஸ்எக்ஸ் உதவியுடன் சென்ற ஆண்டு மார்ச் மாதம் சுனிதா தாயகம் திரும்பினார்.
போயிங்கின் அடுத்த ஸ்டார்லைனர் விண்வெளிப் பயணத்தில் மனிதர்களுக்குப் பதிலாகப் பொருள்களே விண்வெளி நிலையத்திற்குச் செல்லவிருக்கின்றன. மீண்டும் விண்வெளி வீரர்களை அதில் அனுப்பும் முன்னர், எல்லாம் சரியாக வேலை செய்கின்றனவா என்பதை உறுதிசெய்ய விரும்புகிறது நாசா. சோதனைப் பயணம் இவ்வாண்டின் பிற்பகுதியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
60 வயது சுனிதா, கடற்படையின் முன்னாள் மூத்த அதிகாரி. நாசாவில் 27 ஆண்டுக்கும் மேல் பணிபுரிந்திருக்கிறார். மூன்று முறை விண்வெளிக்கு மேற்கொண்ட பயணங்களின்போது அவர் அங்கு 608 நாள் இருந்திருக்கிறார். விண்வெளியில் அதிக நேரம் நடந்த பெண் என்ற சாதனையையும் சுனிதா படைத்திருக்கிறார். விண்ணில் மொத்தம் ஒன்பது முறை 62 மணி நேரம் அவர் நடந்துள்ளார்.
ஓய்வுக்காலம் அவருக்குத் தேவை என்றும் அதில் விரும்பியவற்றை அவர் செய்யவேண்டும் என்றும் பலரும் வாழ்த்துகளைக் கூறிவருகின்றனர்.

