நிலவைச் சுற்றிவந்த விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பினர்

நிலவைச் சுற்றிவந்த விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பினர்

2 mins read
29c1b9bd-561b-47f3-8a3f-cf56bf88ee75
கடலில் நாலாபுறமும் தண்ணீர் சிதறத் தரையிறங்கிய ஆர்டெமிஸ் விண்கலம். மீட்புக் குழுவினர் அவர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்காகப் படகில் வந்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

ஹூஸ்டன்: நிலவுக்கான பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட நான்கு விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாகப் பூமிக்குத் திரும்பியிருக்கின்றனர்.

அவர்கள் பயணம் செய்த ஆர்டெமிஸ்-2 விண்கலம், பூமியின் வளிமண்டலத்தைக் கிழித்துக் கொண்டு பசிபிக் பெருங்கடலில் நாலாபுறமும் தண்ணீர் சிதறத் தரையிறங்கியது.

இதன் மூலம், 50 ஆண்டுகளில் நிலவுக்கு மனிதர்கள் மேற்கொண்ட முதல் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

நாசாவின் ‘இன்டெகிரிட்டி’ எனும் கூம்பு வடிவ விண்கலம், தெற்கு கலிபோர்னியா கடலோரத்தில் பசிபிக் நேரப்படி மாலை 5.00 மணிக்குப் பிறகு வேகத்தைக் குறைக்க உதவும் வான்குடைகளுடன் தரையிறங்கியது.

நால்வரும் இதுவரை விண்வெளியில் மனிதர்கள் பயணிக்காத வெகுதூரத்திற்குச் சென்று திரும்பியுள்ளனர்.

ஆர்டெமிஸ்-2 விண்கலம், பூமியின் சுற்றுப் பாதை மற்றும் 405,554 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிலவு உட்பட மொத்தம் 1,117,515 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ளது.

2028ஆம் ஆண்டில் நிலவின் மேற்பரப்பில் விண்வெளி வீரர்களைக் களமிறக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா திட்டமிட்டுள்ளது.

அதன் முதல் படியாக ஆர்டெமிசின் பயணம் அமைந்துள்ளது.

சூரியன் மறைவதற்குச் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு விண்கலம் தரையிறங்கியதை நாசா நேரடியாக அதன் இணையப்பக்கம் வழியாக ஒளிபரப்பியது.

அந்தப் பகுதியில் தயாராக இருந்த மீட்புக் குழுவினர் கடலில் மிதந்துகொண்டிருந்த விண்கலத்திலிருந்து அமெரிக்க வீரர்களான 50 வயது ரீட் வைஸ்மேன், 49 வயது விக்டர் குளோவர், 47 வயது கிறிஸ்டினா கோச் ஆகியோரையும் 50 வயது கனடிய விண்வெளி வீரர் ஜெரமி ஹேன்சனையும் பாதுகாப்பாக மீட்க உதவினர்.

“விண்கலத்தின் சன்னல் வழியாக நிலவின் அருமையான காட்சியைப் பார்த்தோம்,” என்று பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைவதற்கு முன்பு பூமியில் உள்ள நாசா கட்டுப்பாட்டு நிலையத்திடம் விண்கலத்தின் கமாண்டரான வைஸ்மேன் தெரிவித்தார்.

“நாம் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும் என்று நினைக்கிறோம்,” என்று அதற்குக் கட்டுப்பாட்டு நிலையம் பதிலளித்தது.

“மனிதர்களின் விண்வெளி ஆய்வில் புதிய யுகம் தொடங்கியிருக்கிறது,” என்று விண்வெளி வீரர்கள் திரும்பியதை நாசா வருணித்தது.

நான்கு வீரர்களும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதை அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

மேல் பரிசோதனைக்காக அவர்கள் அமெரிக்கக் கடற்படை கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்