நியூயார்க்: ஈரானின் ராணுவ இலக்குகளை மட்டுமே குறிவைத்து அமெரிக்கப் படைகள் நடத்திய தீவிரத் தாக்குதல்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது.
பாலங்கள், மின் நிலையங்கள் போன்ற பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கிய உள்கட்டமைப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்த்து, ஈரானின் ராணுவ மையங்களை மட்டுமே அமெரிக்கா இலக்கு வைத்துள்ளதால், எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகம் உடனடியாகப் பாதிக்கப்படாது என்ற நம்பிக்கையில் சந்தையில் இந்த விலைச் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக, முந்தைய வர்த்தக அமர்வில் கிட்டத்தட்ட 8 விழுக்காடு வரை உயர்ந்திருந்த ‘பிரென்ட்’ கச்சா எண்ணெய் விலை, தற்போது பீப்பாய்க்கு 89 அமெரிக்க டாலராகக் குறைந்துள்ளது.
அதேபோல, வெஸ்ட் டெக்சஸ் இன்டர்மீடியட் வகை கச்சா எண்ணெய் விலையும் பீப்பாய்க்கு 83 அமெரிக்க டாலருக்கு அருகில் சரிந்து வர்த்தகமாகி வருகிறது. ஜோர்டானில் தங்கியிருந்த அமெரிக்க ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானியப் புரட்சிப் படையின் பல முக்கிய மையங்கள் மீது கடும் தாக்குதல் அலையை நடத்தியதாக அமெரிக்க மத்தியத் தளபத்தியம் உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்கப் படைகள், அனைத்துலக வணிகக் கப்பல்கள் மற்றும் அண்டை வளைகுடா நாடுகளுக்கு ஈரான் மற்றும் அதன் ஆதரவு பெற்ற அமைப்புகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களைக் குறைப்பதே இத்தாக்குதலின் பிரதான நோக்கமாகும் என்று தளபத்தியம் தெரிவித்துள்ளது.
தளபத்தியங்கள், ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தித் தளங்கள், கடலோரக் கண்காணிப்பு மையங்கள் மற்றும் கடற்படை வசதிகள் ஆகியவை அழித்தொழிக்கப்பட்ட இலக்குகளில் அடங்கும்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வருவதால், மத்திய கிழக்கு வட்டாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானின் ஆதரவு பெற்ற ஏமன் நாட்டின் ஹூதிப் படையினர் சவூதி அரேபியாவுக்குக் கப்பல் போக்குவரத்தை முடக்க அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், அமெரிக்கப் படைகளுடன் இணைந்து சவூதி படைகளும் ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு தீவிரவாத இலக்குகள் மீது தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன.

