ஈரான்மீது தாக்குதல்; உலகெங்கும் தூதரகங்களை மூடும் இஸ்ரேல்

1 mins read
768212d8-ea1e-4871-b5b0-fbaa47e0a802
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள இஸ்ரேலியத் தூதரகத்தில் பறக்கும் இஸ்ரேலியக் கொடி. - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: ஈரான்மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ள இஸ்ரேல், உலகெங்கும் உள்ள தனது தூதரகங்களை மூடி வருகிறது.

குடிமக்கள் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தியுள்ள இஸ்ரேல், பொது இடங்களில் யூதர் அல்லது இஸ்ரேலியச் சின்னங்களைக் காட்சிப்படுத்த வேண்டாம் என்றும் அவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. தூதரக இணையப்பக்கங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) வெளியிடப்பட்ட அறிக்கைகளில் இது குறிப்பிடப்பட்டது.

இஸ்ரேல் தூதரகச் சேவைகளை வழங்காது என்றும் உள்ளூர்ப் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒத்துழையுங்கள் என்றும் குடிமக்களிடம் இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது.

தூதரகங்கள் எவ்வளவு காலத்திற்கு மூடப்பட்டிருக்கும் என்பதற்கான தகவல் வழங்கப்படவில்லை.

“அண்மைய நிலவரத்தை முன்னிட்டு, உலகெங்கும் உள்ள இஸ்ரேலியத் தூதரகங்கள் மூடப்பட்டிருக்கும். இதனால் தூதரகச் சேவைகள் வழங்கப்பட மாட்டா,” என்று அறிக்கை குறிப்பிட்டது.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுடன் வெள்ளிக்கிழமை பேசிய ஜெர்மானியப் பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், யூதர் மற்றும் இஸ்ரேலியத் தளங்களின் பாதுகாப்பை ஜெர்மனி தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

சுவீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் உள்ள யூத வழிபாட்டுத் தலம் ஒன்றுக்கு வெளியே பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. அக்கட்டடத்துக்கு அருகே ஒரு காவல்துறை வேனும் காரும் நிறுத்தப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்