லண்டன்: பிரிட்டனின் போர் விமானங்களுடன் இணைந்து பிரெஞ்சு போர் விமானங்களும் சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளின் ஆயுதக் கிடங்குமீது தாக்குதல் நடத்தியுள்ளன.
நிலத்திற்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த ஆயுதக் கிடங்கை அடையாளம் கண்டு, சனிக்கிழமை (ஜனவரி 3) இரவு தாக்குதல் நடத்தியதாகப் பிரிட்டனின் தற்காப்பு அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ரகசியத் தகவல்மூலம் ஆயுதக் கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
மத்திய சிரியாவில் உள்ள பால்மிராவின் வடக்குப் பகுதியில் இருக்கும் மலைகளுக்கு இடையே அந்த ஆயுதக் கிடங்கு இருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
“மலைக்கு நடுவே இருந்த ஆயுதக் கிடங்கைத் துல்லியமாக அடையாளம் கண்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. கிடங்கிற்குச் செல்லக்கூடிய சுரங்கப்பாதைகளும் வெற்றிகரமாக அழிக்கப்பட்டன,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தாக்குதல் சம்பவத்தில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. போர் விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பாக ராணுவ முகாமிற்குத் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சிரியாவிலும் ஈராக்கிலும் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 7,000 ஐஎஸ் பயங்கரவாதிகள் அந்நாடுகளில் உள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.

