ஜெருசலம்: தென் லெபனானில் தாங்கள் ஆகாயப் படைத் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் இருவர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
அந்த இருவர் ஆயுதம் ஏந்தியிருந்ததாகவும் சந்தேகப்படும் வகையில் நடமாடிக்கொண்டிருந்ததாகவும் இஸ்ரேலிய ராணுவம் வெள்ளிக்கிழமை (மே 22) கூறியது. இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையே சண்டை நடந்துவரும் பகுதியில் அவர்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
போர்நிறுத்தத்தைத் தாண்டியும் இஸ்ரேலும் ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லாவும் லெபனானின் தெற்குப் பகுதியில் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளன. இரு தரப்புக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் சென்ற வாரம் நீட்டிக்கப்பட்டது.
“தென் லெபனானில் இஸ்ரேலிய எல்லைப் பகுதிக்கு நூற்றுக்கணக்கான மீட்டர் தொலைவுக்குள் ஆயுதம் ஏந்திய நபர்கள் இருவர் சந்தேகப்படும் வகையில் நடமாடிக்கொண்டிருந்ததை இஸ்ரேலிய தற்காப்புப் படை சற்று நேரத்துக்கு முன்பு அடையாளம் கண்டது,” என்று இஸ்ரேலிய ராணுவம் டெலிகிராம் செயலியில் தெரிவித்தது.
“அந்த ஆயுதம் ஏந்திய நபர்கள் அடையாளம் காணப்பட்டதோடு அவர்களை இஸ்ரேலிய தற்காப்புப் படை தொடர்ந்து கண்காணிக்கப்பட்ட பிறகு அவர்கள் ஆகாயப் படைத் தாக்குதலில் அழிக்கப்பட்டனர்,” என்று அந்த டெலிகிராம் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

