பாகிஸ்தானில் ராணுவக் கட்டடம் மீது தாக்குதல்; மூவர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் ராணுவக் கட்டடம் மீது தாக்குதல்; மூவர் உயிரிழப்பு

2 mins read
599dd8b8-6f04-4c81-bd82-a85ccdaef6a9
பாகிஸ்தானின் கராச்சியில் வெடிச்சத்தம், துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் தகவல் வெளிவந்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள ராணுவக் கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானின் சிந்த் ரேஞ்சர்ஸ் (Sindh Rangers) படையைச் சேர்ந்த குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக ‘டான்’ (Dawn) செய்தித்தாள் சனிக்கிழமை (ஜூன் 27) செய்தி வெளியிட்டுள்ளது.

கராச்சியின் ‘குலிஸ்தான்-இ-ஜோஹர்’ (Gulistan-i-Jauhar) பகுதியில் பல பல்கலைக்கழகங்களுக்கும் பாகிஸ்தானின் வானிலை ஆய்வு மையத்திற்கும் அருகிலுள்ள முக்கியச் சாலையில் பெரிய வெடிச்சத்தம் ஒன்று கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

சிந்த் ரேஞ்சர்ஸ் தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாகச் சிந்த் மாநிலக் காவல்துறைத் தலைவர் ஜாவேத் ஆலம் ஓதோ டான் செய்தித்தாளிடம் தெரிவித்தார்.

வெடிச்சத்தம் கேட்டபோது, தாம் அருகிலுள்ள பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்ததாக முஹம்மது பஷ் கூறினார்.

“நிலநடுக்கம் ஏற்படும்போது எப்படி இருக்குமோ அப்படி நிலம் அதிர்ந்தது,” என்று அப்பகுதியில் உணவகம் நடத்தி வரும் 40 வயது திரு பஷ் கூறினார்.

“நாங்கள் வெளியே வந்தபோது, எங்கும் புகை பரவியிருந்தது. பின்னர் துப்பாக்கிச் சூடு தொடங்கியது,” என்று அவர் கூறினார்.

துப்பாக்கிச் சூடு கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு நீடித்ததாகவும் அவர் தெரிவித்தார். சம்பவ இடத்தில் இருந்த ராய்ட்டர்ஸ் செய்தியாளர் ஒருவர், துப்பாக்கிச் சூடு முடிந்துவிட்டதாகவும், நிலைமை அமைதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அக்டோபர் 2024ல் சீனர்களின் வாகன அணிவகுப்பைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் சீன நாட்டவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, கராச்சியில் நடந்த ஆகப் பெரும் தாக்குதல் இது.

குறிப்புச் சொற்கள்
தாக்குதல்புகைராணுவம்துப்பாக்கிச் சூடு