ரஷ்யாவில் தாக்குதல்: சிறுவர்கள் மரணம், தளவாட மையத்தில் தீ

ரஷ்யாவில் தாக்குதல்: சிறுவர்கள் மரணம், தளவாட மையத்தில் தீ

2 mins read
5e9af0b0-07df-4df6-90c2-8cf55a4133bd
உக்ரேனின் மிக முக்கியமான பொருளியல் துறைகள் மீது ரஷ்யா தகுந்த பதிலடித் தாக்குதலைத் தொடுக்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

மாஸ்கோ: ரஷ்யாவின் தெற்குப் பகுதியிலுள்ள கிராஸ்னோதார் நகரில் இரவில் நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலின் சிதைவுகள் தனியார் குழந்தைகள் பராமரிப்பு நிலையம் ஒன்றின் மீது விழுந்ததில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

மேலும் ஏழு சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்ததாக ஆளுநர் வெனியாமின் கோன்ட்ராத்யேவ் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலின்போது உடைந்த பாகங்கள் குடியிருப்புக் கட்டடங்கள் மீதும் விழுந்ததாகவும் அதனால் உருவான தீ விபத்தால் ‘ஓசோன்’ என்ற ரஷ்ய இணையவழி விற்பனை நிறுவனத்தின் தளவாட மையம் தீப்பற்றி எரிந்ததாகவும் அவர் தமது டெலிகிராம் பக்கத்தில் குறிப்பிட்டார்.

அதேவேளையில், கிராஸ்னோதாருக்கு அருகில் உள்ள ஸ்டாவ்ரோபோல் வட்டாரத்தில் நெவின்னோமிஸ்க் தொழில்துறை பகுதியில் ரசாயன உற்பத்தி மையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட மற்றொரு ஆளில்லா வானூர்தி தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக ஆளுநர் விளாடிமிர் விளாடிமிரோவ் தெரிவித்தார். ரஷ்யாவுடன் ஐந்தாவது ஆண்டாகப் போர் புரிந்துவரும் உக்ரேன், ரஷ்ய மக்கள் அன்றாட வாழ்க்கையில் போரின் தாக்கத்தை உணரும் வகையில் அந்நாட்டின் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் வர்த்தக மையங்களைக் குறிவைத்துத் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்குப் பதிலடித் தாக்குதலாக உக்ரேனின் வடகிழக்கு நகரமான கார்கிவ் புறநகர்ப் பகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் மூவர் உயிரிழந்தனர்.

ரஷ்யாவின் இத்தகைய தாக்குதல்களை முறியடிக்க உக்ரேன் தனது நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் கூடுதல் ஏவுகணைகளைக் கோரி வருகிறது.

இதனிடையே, ரஷ்யப் பொருளியல் இலக்குகள் மீது உக்ரேன் தாக்குதல் நடத்துவதன் மூலம் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரேனின் மிக முக்கியமான பொருளியல் துறைகள் மீது ரஷ்யா தகுந்த பதிலடித் தாக்குதலைத் தொடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
ரஷ்யாஉக்ரேன்தாக்குதல்ஆளில்லா வானூர்திமரணம்தீ