மஸ்கட்: ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளான குவைத் நாட்டின் ‘எம்டி காசிமா III’ எண்ணெய் கப்பலில் இருந்த ஐந்து இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுக் கரைக்குக் கொண்டுவரப்பட்டதாக ஓமானில் உள்ள இந்தியத் தூதரகம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) தெரிவித்துள்ளது.
ஓமான் அதிகாரிகளின் உதவியுடன் மீட்பு நடவடிக்கை வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டதாக தூதரகம் கூறியது. டோகோ நாட்டின் லோமே துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அக்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
பாரசீக வளைகுடா பகுதியில் 4,500க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் பல்வேறு கப்பல்களில் பணியாற்றி வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் உறுதிப்படுத்தினார்.
அவர்களின் நலனை இந்தியக் கப்பல் போக்குவரத்து அமைச்சும் தூதரகங்களும் இணைந்து உறுதிசெய்து வருகின்றன.
அண்மைக் காலமாகப் பாரசீக வளைகுடா, செங்கடல், கருங்கடல் ஆகிய அனைத்துலக் கடல்சார் பாதைகளில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
சென்ற வாரம் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 81வது பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், கடல்சார்ப் பாதைகளில் மாலுமிகள் மீதான தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனக் கண்டனம் தெரிவித்திருந்தார்.
வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்துலகச் சட்டங்கள் கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் ஆசிய வட்டாரத்தில் அமைதி நிலவ அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
